Pages

Wednesday, April 10, 2013

ஓட்டுசாவடி அலுவலர் பணியிட உத்தரவை வாங்க மறுக்கும் ஆசிரியர்கள்

ஓட்டுசாவடி பணி அலுவலர் பணியிட உத்தரவை, இடை நிலை ஆசிரியர்கள் வாங்க மறுத்து வருவதால்,தேர்தல் பணிகளில் தொய்வு ஏற்படும் நிலை உள்ளது.ஒவ்வொரு பகுதிக்கும், தேர்தல் ஆணையத்தால், ஓட்டு சாவடி அலுவலர்கள் நியமிக்கப்படுகின்றனர். 


இதன் பணியில், அங்கன்வாடி பணியாளர்கள், இடை நிலை ஆசிரியர்கள், ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள், அரசு துறை அலுவலர்கள் இடம் பெறுகின்றனர். இவர்களுக்கு ஆண்டுக்கு மூவாயிரம் ரூபாய் சம்பளமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும், ஏப்.1ம் தேதியிலிருந்து, அடுத்த ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை பணி நியமன ஆணை வழங்கப்படுகிறது.

தேர்தல் நேரங்களில் மட்டுமே செயல்பட்டு வந்த, தேர்தல் ஆணையம், தற்போது ஆண்டு முழுவதும் செயல்பட்டு வருகிறது. இதனால், வாக்காளர் அடையாள அட்டை பெறுவது, எளிதாகி விட்டது. இதற்கேற்ப வேலை பளுவும் கூடி வருகிறது. மாதத்தில், பகுதிநாளில், பகுதி நேர வேலை பார்த்தவர்கள், அன்றாடம் பகுதி நேரமாக பணியாற்றும் நிலை உள்ளது. இவற்றில், இடை நிலை ஆசிரியர்களில், ஒரு சிலர் தங்களுக்கு பள்ளியில், பணிப்பளு அதிகரிப்பதால், ஓட்டு சாவடி அலுவல் வேண்டாம் என ஒதுங்கி வருகின்றனர். இடை நிலை ஆசிரியர்கள், இதில் இடம் பெறும் வகையில், அரசு ஆணை உள்ளதால், தேர்தல் அலுவலர்கள் செய்வதறியாது திகைத்து வருகின்றனர். இந்த ஆண்டுக்குரிய பணி நியமன ஆணையை, இதுவரை வாங்காமல் பலர் இழுத்தடித்து வருகின்றனர். பார்லி., தேர்தல் நெருங்கி வரும் வேளையில், இவர்கள் ஓட்டு சாவடி அலுவலர் பணியை புறக்கணிப்பதால், தேர்தல் பணிகளில் தொய்வு ஏற்படும் நிலை உள்ளது. தேர்தல் அலுவலர் ஒருவர் கூறியதாவது: இடை நிலை ஆசிரியர்களுக்கு, பள்ளி அளவில் பல்வேறு நெருக்கடி உள்ளதால், இப்பணிக்கு வர தயக்கம் காட்டுகின்றனர். வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், கூடுதல் ஓட்டு சாவடி அலுவலர்கள் தேவைப்பட்டு வருகின்றனர். இந்த நேரத்தில், இவர்கள் ஓட்டு சாவடி அலுவலர் பணியை புறக்கணிப்பது, தேர்தல் வேலையில், பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இதை தவிர்க்க வேலையில்லாத இளம் பெண்கள், இளைஞர்களை இப்பணியில் நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

No comments:

Post a Comment