அனைவருக்கும் கல்வி இயக்கம் மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அர்ச்சனா பட்நாயக் தலைமையில் புதன்கிழமை நடந்தது. மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடந்த இக்கூட்டத்திற்கு கோவை எம்.பி. பி.ஆர்.நடராஜன் தலைமை வகித்தார்.
கூட்டத்தில் 2013-14 கல்வியாண்டு நிதி ஒதுக்கீடு மற்றும் செலவினம் பற்றி விவாதிக்கப்பட்டது. மேலும் 2014-15ஆம் கல்வியாண்டு முழு வரைவுத் திட்டம் பற்றியும், பள்ளிக் கட்டுமானப் பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
இதில், அனைவருக்கும் கல்வி இயக்கத் திட்டத்தில் புதிதாக 12 பள்ளிகள் கட்ட வேண்டும். வால்பாறையில் உள்ள பள்ளிக் குழந்தைகளுக்கு குளிர் தாங்கும் கம்பளி ஆடை, பேன்ட் ஆகியவை வழங்க வேண்டும். பள்ளிகளில் மதிய உணவு போல காலையில் பால் வழங்க வேண்டும் என்று, அனைவருக்கும் கல்வி இயக்க அதிகாரிகள் பரிந்துரை செய்துள்ளனர்.
அனைவருக்கும் கல்வி இயக்கம் திட்டத்தின் கீழ் கோவை மாவட்டத்திற்கு கடந்த 2013-14 கல்வியாண்டில் ரூ. 90 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இக்கூட்டத்தில் எம்எல்ஏ.க்கள் எம்.ஆறுமுகம், எம்.கே.முத்துகருப்பண்ணசாமி, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் கனகராஜ், முதன்மைக் கல்வி அலுவலர் அ.ஞானகௌரி, அனைவருக்கும் கல்வி இயக்க முதன்மை கல்வி அலுவலர் லத்திகா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment