அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க, கடந்த இரண்டு ஆண்டுகளாக, ஆங்கில வழிக்கல்வி துவக்கப்பட்டுள்ளது.
ஒரு பள்ளிக்கு குறைந்தபட்சம் 20 மாணவர்கள் இருப்பின், ஆங்கில வழிக்கல்வியை துவங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.அதன் படி, கோவை மாவட்டத்தில், கடந்த ஆண்டு 249 பள்ளிகளிலும், நடப்பு கல்வியாண்டில் 92 பள்ளிகள் உட்பட 341 தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி செயல்பட்டு வருகிறது. ஆங்கில வழி பிரிவை கையாள்வதற்கு, அரசு தனிப்பட்ட முறையில் ஆசிரியர்களை நியமிக்கவில்லை. ஆசிரியர்கள் பற்றாக்குறையால் தமிழ் வழியை கையாளும் ஆசிரியர்களே, ஆங்கில வழி மாணவர்களுக்கும் கற்பித்தல் பணியை மேற்கொள்கின்றனர். இதனால், ஆசிரியர்களுக்கு பணிச்சுமை அதிகரித்துள்ளது. மேலும், மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கவும் வாய்ப்புகள் உள்ளது. இதனால், ஆங்கில வழி பிரிவு வகுப்புகளை கையாள தனிப்பட்ட முறையில் ஆசிரியர்கள் நியமனம் செய்யவேண்டும் என்று பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில், உபரி ஆசிரியர்களின் பட்டியல் மாநிலம் முழுவதும் கணக்கிடப்பட்டு, பிற ஒன்றியங்களுக்கும், பிற மாவட்டங்களுக்கும் கலந்தாய்வின் அனுப்பும் பணிகள் நடந்து வருகிறது.
முதன்மை கல்வி அதிகாரி ஞானகவுரி கூறுகையில்,''ஆங்கில வழிக்கல்வி பிரிவு துவக்கப்பட்டுள்ளதால், கூடுதல் வகுப்புகளை கவனிக்க ஆசிரியர்கள் தேவைப்படுகின்றனர். இதனால், உபரியாக பிற இடங்களுக்கு மாற்றப்படவுள்ள ஆசிரியர்களின் பட்டியல் தயாரித்து, அதில் தகுதியான ஆசிரியர்கள் ஆங்கில வழிக்கல்வி துவக்கப்பட்டுள்ள பள்ளிகளில் கூடுதலாக நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளது,'' என்றார்
No comments:
Post a Comment