தமிழ் வழிக் கல்வி பயின்றவர்களுக்கு, வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கும் சட்டப்படி, ஒரு பணிக்கு நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதியை, தமிழ் வழியில் படித்திருந்தால் போதுமானது.
முதுகலை பட்டம் தமிழ் வழியிலும், இளங்கலை படிப்பை ஆங்கில வழியில் முடித்திருந்தாலும், ஆசிரியர் பணி வழங்க வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவு உறுதி செய்யப்படுகிறது,' என மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
கமுதி நீராவியை சேர்ந்த மாரியம்மாள், ஏற்கனவே தாக்கல் செய்த மனு: தமிழ் வழியில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, எம்.காம்.,- பி.எட்., தேர்ச்சியடைந்தேன். ஆங்கில வழியில் பி.காம்., தேர்ச்சியடைந்தேன். முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்காக, 2012--13ல் ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) நடத்திய தேர்வில் பங்கேற்றேன். 'கட்-ஆப்' மதிப்பெண் 92. எனக்கு 102 மதிப்பெண் கிடைத்தது. டி.ஆர்.பி., தரப்பில், 'நீங்கள் முதுகலை (எம்.காம்.,) தமிழ் வழியிலும், இளங்கலை (பி.காம்.,) ஆங்கில வழியிலும் படித்துள்ளதால், பணி நியமனம் வழங்க முடியாது,' என நிராகரித்தனர். தமிழ் வழியில் படித்தவர்களுக்கு, வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. ஆசிரியர் பணி வழங்க உத்தரவிட வேண்டும், என குறிப்பிட்டார். தனி நீதிபதி: தமிழ் வழியில் படித்தவர்களுக்கான சிறப்புச் சலுகையை, மனுதாரருக்கு வழங்க வேண்டும். முதுகலை பட்டம் தமிழ் வழியிலும், இளங்கலை படிப்பை ஆங்கில வழியில் முடித்திருந்தாலும், மனுதாரரின் பிற தகுதிகள் திருப்தி அளிக்கும்பட்சத்தில், அவருக்கு டி.ஆர்.பி., பணி வழங்க வேண்டும், என்றார். இதை எதிர்த்து அகிலா உட்பட 6 பேர்,' தனி நீதிபதியின் உத்தரவுப்படி ஏற்கனவே, தேர்வு செய்யப்பட்டவர்களின், ஒட்டுமொத்த பட்டியலையும் டி.ஆர்.பி., மாற்றியமைத்தது. இதில், மாரியம்மாளின் பெயரை சேர்த்து வெளியிட்டது. இதனால் ஏற்கனவே, தேர்வு பெற்ற எங்களது பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டது. எங்களுக்கு பணி கிடைக்கவில்லை. தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்,' என மேல்முறையீடு செய்தனர். நீதிபதிகள் வி.ராமசுப்பிரமணியன், வி.எம்.வேலுமணி கொண்ட பெஞ்ச் முன், மனு விசாரணைக்கு வந்தது. அரசு சிறப்பு வக்கீல் சண்முகநாதன், மாரியம்மாள் சார்பில் வக்கீல் ஐசக்மோகன்லால் ஆஜராகினர்.
நீதிபதிகள்:
தமிழ் வழிக் கல்வி பயின்றவர்களுக்கு, வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கும் சட்டத்தை, அரசு 2010 ல் அமல்படுத்தியது. அதன்படி, ஒரு பணிக்கு நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதியை, தமிழ் வழியில் படித்திருந்தால் போதுமானது. இவ்வழக்கைப் பொருத்தவரை, முதல் வகுப்பிலிருந்து பட்ட மேற்படிப்பு மற்றும் பி.எட்.,வரை தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மட்டுமே, சலுகை வழங்குவதா? அல்லது பட்டமேற் படிப்பு, பி.எட்., மட்டும் தமிழ் வழியியல் படித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்குவதா? என தீர்மானிக்க வேண்டியுள்ளது. இவ்வழக்கில், ஆசிரியர் பணிக்கு தகுதியாக, மாரியம்மாள் தமிழ் வழியில் எம்.காம்.,மற்றும் பி.எட்., படித்துள்ளார். சட்டம் அமலாவதற்கு முன் பலர் தமிழ், ஆங்கில வழியில் படித்திருக்கலாம். அமலானபின், தமிழ் வழி கல்விக்கு மாறியிருக்கலாம். இவ்வாறு தமிழ் வழிக்கு மாறி, படித்ததால் பணி வழங்க முடியாது என கூற முடியாது. தனி நீதிபதியின் உத்தரவு உறுதி செய்யப்படுகிறது. மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது, என்றனர்.
No comments:
Post a Comment