கல்வி பணிகளை ஆய்வு செய்வது மற்றும் களப்பணிகள் ஆற்றுவது என, டி.இ.ஓ.,க்கள் பங்கு அதிகம். மாநிலத்தில் 70 டி.இ.ஓ., பணியிடங்கள் காலியாக உள்ளன. 35 சி.இ.ஓ., பணியிடங்கள் நிரப்பப்பட்ட நிலையில், டி.இ.ஓ., பணிமூப்பு பட்டியலும், பள்ளி கல்வி துறையில் தயார் நிலையில் உள்ளது. ஆனால், அறிவிப்பில் தாமதம் ஏற்படுகிறது.
பள்ளி கல்வி துறை இயக்குனராக தேவராஜ் பொறுப்பேற்றதும், காலி சி.இ.ஓ., பணியிடங்களை நிரப்பியது, "ஆன்லைன்' கவுன்சிலிங் மூலம் ஆசிரியர்களுக்கு அலைச்சலை தவிர்த்தது போன்ற நடவடிக்கைகள்
எடுத்தது, வரவேற்பை பெற்றது. டி.இ.ஓ.,க்கள் பணியிடங்களை அறிவிப்பதில் மட்டும் "தொய்வு' நீடிக்கிறது.
பதவி உயர்வு மூப்பு பட்டியலில் உள்ள தலைமையாசிரியர் ஒருவர் கூறியதாவது: டி.இ.ஓ.,க் கள் பதவி உயர்வு, நேரடி நியமனம் மூலம் 25 சதவீதம், உயர்நிலை பள்ளி தலைமையாசிரியர்களுக்கு 40 சதவீதம், மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர்களுக்கு 35 சதவீதம் அடிப்படையில் ஒதுக்கப்படும். தலைமையாசிரியர்களின் பணிப்பதிவேடு (எஸ்.ஆர்.,) மற்றும் "கான்பிடன்ஷியல்' சான்று பரிசீலிக்கப்படும். தலைமையாசிரியர்கள் ரகசிய அறிக்கைகள் பெறுவதில் சிக்கல் உள்ளது. தலைமையாசிரியர் ஒருவர் பணிக்காலத்தில் எத்தனை டி.இ.ஓ.,க்களுக்கு கீழ் பணியாற்றினாரோ அவர்களின் ரகசிய அறிக்கைகளையும் பெற்று, இயக்குனரிடம் சமர்ப்பிக்க வேண்டும். பல அதிகாரிகள் ஓய்வு மற்றும் காலமானதையடுத்து, அந்த அறிக்கைகள் பெறமுடியவில்லை. இதனால், பதவி உயர்வு பட்டியல் அறிவிப்பில் தாமதம் ஆகிறது. பணிமூப்பு பட்டியலில் உள்ள தலைமையாசிரியர், கடைசியாக அதிகாரியிடம் பணியாற்றியவரின் ரகசிய அறிக்கையை மட்டும் பெற்றால் போதும், என விதியை தளர்த்த வேண்டும், என்றார்.
No comments:
Post a Comment