இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியில் சேர வேண்டும் எனில், டி.இ.டி., எனப்படும், ஆசிரியர் தகுதி தேர்வில், குறைந்தபட்சம், 60 சதவீத மதிப்பெண்கள் பெற வேண்டும். 150 மதிப்பெண்களுக்கு நடக்கும் தேர்வில், 90 மதிப்பெண்கள் எடுத்தால், பணி நியமனத்திற்கு தகுதி பெறுகின்றனர்.
ஆனால், தேவையை விட, அதிகமானோர் தேர்ச்சி பெற்றால், மதிப்பெண் அடிப்படையில், பணி நியமனம் செய்யப்படுவர். ஜூலையில் நடந்த டி.இ.டி., தேர்வில், தேர்ச்சி பெறுவதே, குதிரைக் கொம்பாக இருந்தது. 6.67 லட்சம் பேர் எழுதியதில், வெறும், 2,448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர்.
இதனால், தேர்ச்சிக்குரிய மதிப்பெண்களை பெற்றாலே, வேலை உறுதி என்பது தான், தற்போதைய நிலை. இந்நிலையில், தேர்ச்சி சதவீதம் குறைந்தால், ஆசிரியர்களை தேர்வு செய்வதில், பெரும் சிக்கல் எழும் நிலை ஏற்பட்டது.
இது தொடர்பாக, சட்டசபையில் பேசிய, பள்ளிக்கல்வி அமைச்சர் சிவபதி, ""தேர்ச்சி சதவீதத்தின் நிலையைப் பொறுத்து, முதல்வர், உரிய நடவடிக்கை எடுப்பார்,'' என, தெரிவித்தார். இதனால், தேர்ச்சி மதிப்பெண் குறைக்கப்படுமோ என்ற, எதிர்பார்ப்பு எழுந்தது.ஆனால், நேற்று வெளியான தேர்வு முடிவில், 3 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். "முதல் தாள் தேர்வில், தேவையை விட, 3,000 பேர் கூடுதலாகவும், இரண்டாம் தாள் தேர்வில், பற்றாக்குறை நிலை இருந்தாலும், தேர்ச்சி மதிப்பெண் குறைப்பு கிடையாது' என, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன.
இது குறித்து, துறை வட்டாரங்கள் மேலும் கூறியதாவது:இடைநிலை ஆசிரியர், 7,000 பேர் தேவை. ஆனால், 10 ஆயிரத்து, 397 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். பட்டதாரி ஆசிரியர், 20 ஆயிரம் பேர் தேவை. இதில், 8,849 பேர் மட்டுமே, தேர்ச்சி பெற்றுள்ளனர்; இதில், பற்றாக்குறை உள்ளது.
எனினும், ஏப்ரல் அல்லது ஜூனில் நடக்கும், அடுத்த டி.இ.டி., தேர்வு மூலம், பற்றாக்குறை சரியாகிவிடும். எனவே, தகுதி மதிப்பெண்களை குறைக்கும் எண்ணம் இல்லை.இவ்வாறு, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
No comments:
Post a Comment