தமிழத்தின் 16 பள்ளிகளில் சுத்தமாக ஆசிரியர்களே இல்லை என்றும், பல பள்ளிகளில் 1 அல்லது 2 ஆசிரியர்களே உள்ளனர் என்றும், ராஷ்ட்ரிய மத்யமிக் சிக்ஷா அபியான் சர்வே, அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. ஆர்.எம்.எஸ்.ஏ., என்று சுருக்கமாக அழைக்கப்படும் அந்த சர்வே(2012-13) தெரிவிக்கும் பல அதிர்ச்சி தகவல்கள் பின்வருமாறு;
தமிழகத்திலுள்ள 16 பள்ளிகளில், சுத்தமாக, ஆசிரியர்களே இல்லை. அத்தகையப் பள்ளிகள், விழுப்புரம், சென்னை, வேலூர், நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் உள்ளன.
இதைத்தவிர, மாநிலத்தின் 2,253 பள்ளிகளில், ஒரே ஒரே ஆசிரியர்தான் உள்ளார். இதுபோன்ற பள்ளிகள், கிருஷ்ணகிரி மாவட்டத்தில்தான் அதிகளவில் உள்ளன. அம்மாவட்டத்தின் 195 பள்ளிகளில் இந்த நிலை. மற்றபடி, ஒற்றை ஆசிரியர் பள்ளிகள், திருவண்ணாமலை மாவட்டத்தில் 159ம், சிவகங்கை மாவட்டத்தில் 134ம், வேலூர் மாவட்டத்தில் 127ம், விழுப்புரம் மாவட்டத்தில் 113ம் மற்றும் தர்மபுரி மாவட்டத்தில் 131ம் உள்ளன.
இதில், ஒரு பெரிய கொடுமை என்னவெனில், மேல்நிலைப் பள்ளிப் படிப்பை மேற்கொள்ளும் 765 மாணவர்கள் உள்பட, மொத்தம் 83,641 மாணவர்கள், இந்த ஒற்றை ஆசிரியர்கள் பள்ளிகளை சேர்ந்தவர்கள். தமிழகத்தின் 16,421 பள்ளிகள், வெறும் இரண்டு ஆசிரியர்களை மட்டுமே கொண்டவை.
உண்மையை சொல்ல வேண்டுமெனில், தமிழகத்திலுள்ள மாநில அரசு நடத்தும், மத்திய அரசு நடத்தும் மற்றும் தனியார் நடத்தும், ஆகிய வகைப்பாடுகளைச் சேர்ந்த பள்ளிகளில், மூன்றில் ஒரு பங்கிற்கும் கூடுதலான பள்ளிகளில், 3க்கும் குறைவான ஆசிரியர்களே பணியாற்றுகிறார்கள்.
பல வகுப்புகளில், பலவிதமான பாடங்களை நடத்த, 1 அல்லது 2 ஆசிரியர்களே, பல அரசுப் பள்ளிகளில் இருக்கிறார்கள் என்று, கல்வித்துறை நிபுணர்கள், பல்வேறு சமயங்களில் சுட்டிக்காட்டியே வந்துள்ளனர். இதனாலேயே, பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளை, தனியார் பள்ளிகளில் சேர்க்கிறார்கள்.
தமிழகத்தில், நிரப்புவதற்கு அனுமதியளிக்கப்பட்ட 21,931 ஆசிரியப் பணியிடங்கள், இன்னும் காலியாகவே உள்ளன. வேலூர் மாவட்டத்தில் மட்டும், நிரப்பப்பட வேண்டிய, அனுமதியளிக்கப்பட்ட ஆசிரிய பணியிடங்கள் 3,000 உள்ளன.
சேலம், காஞ்சிபுரம் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்கள், அனுமதியளிக்கப்பட்ட அதிக ஆசிரியப் பணியிடங்களை நிரம்பாமல் இருக்கும் இதர மாவட்டங்கள். அதேசமயம், சென்னை போன்ற மாவட்டங்களில், அனுமதியளிக்கப்பட்ட இடங்களுக்கும் அதிகமாகவே, ஆசிரியர்கள் கிடைக்கின்றனர். மேற்கூறிய பிரச்சினைகளால், ஆசிரியர் - மாணவர் விகிதாச்சாரத்தில் பெரும் சிக்கல்கள் ஏற்படுகின்றன.
இதுபோன்ற விகிதாச்சார சிக்கல்கள் நிறைந்ததாக, மொத்தம் 55 பள்ளிகள் வேலூர் மாவட்டத்தில் உள்ளன. இதுதவிர, காஞ்சிபுரம் மாவட்டத்தில் 49ம், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 36ம், கடலூர் மாவட்டத்தில் 27ம், சென்னை மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் 25ம் உள்ளன.
No comments:
Post a Comment