தபால், தொலைதூர கல்வி, திறந்தவெளி பல்கலை மூலம், எம்.பில்., மற்றும்
பிஎச்.டி., பட்டம் பெற்றவர்களை, கல்லூரிகளில் விரிவுரையாளராக நியமிக்கத்
தகுதியில்லை' என்ற அரசாணையை ரத்து செய்யக் கோரிய மனுவை, சென்னை ஐகோர்ட்
தள்ளுபடி செய்தது.
வேலூர், ஊரிஸ் கல்லூரி பேராசிரியராக
பணியாற்றியவரும், வழக்கறிஞருமான, இளங்கோவன் தாக்கல் செய்த மனு: கடந்த,
2009ம் ஆண்டு, உயர் கல்வித் துறை, ஒரு அரசாணையை பிறப்பித்தது. அதில்,
"
தபால் அல்லது தொலைதூர கல்வி அல்லது திறந்தவெளி பல்கலைக்கழகம் மூலம்,
எம்.பில்., மற்றும் பிஎச்.டி., பட்டம் பெற்றவர்கள், அரசு நியமனங்களுக்கோ,
சுயநிதி கல்லூரிகள் உள்ளிட்ட கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில்
நியமனம் பெறவோ தகுதியில்லை' என, கூறப்பட்டுள்ளது. இந்த அரசாணை,
தன்னிச்சையானது; யு.ஜி.சி., விதிமுறைகளுக்கு எதிரானது. கல்லூரிகளில்
விரிவுரையாளர்கள், உதவிப் பேராசிரியர்களுக்கான தகுதியை நிர்ணயிக்கும்
அதிகாரம், யு.ஜி.சி.,க்கு தான் உள்ளது. தபால் மற்றும் தொலைதூர கல்வி மூலம்
வழங்கப்படும் படிப்புகளை, சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்கள் மற்றும்
யு.ஜி.சி., அங்கீகரித்துள்ளது. தொலைதூர கல்விக் குழுவும், பல்கலைக்கழகங்கள்
வழங்கும் படிப்புகளை, அங்கீகரித்துள்ளது. யு.ஜி.சி., விதிமுறைகளில்,
எம்.பில்., மற்றும் பிஎச்.டி., தகுதியை, பொதுவாக தான் குறிப்பிட்டுள்ளது.
ரெகுலர் படிப்பு அல்லது தபால் மூலம் அல்லது தொலைதூர கல்வி மூலம் தான், இந்த
தகுதிகளை பெற்றிருக்க வேண்டும் என, கூறப்படவில்லை. எனவே, உயர் கல்வித்
துறையின் அரசாணைக்கு, தடை விதிக்க வேண்டும். அதை, ரத்து செய்து உத்தரவிட
வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனுவை, நீதிபதிகள்
பானுமதி, சிவஞானம் அடங்கிய, "டிவிஷன் பெஞ்ச்' விசாரித்தது. ஆசிரியர் தேர்வு
வாரியம் சார்பில், கூடுதல் அரசு பிளீடர் சஞ்சய் காந்தி ஆஜரானார். "டிவிஷன்
பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு: கல்வியாளர்களின் ஆலோசனை பெற்று, உயர்
கல்வியின் தரத்தை மேம்படுத்தும் நோக்கில், அரசு எடுத்துள்ள முடிவில், இந்த
கோர்ட் குறுக்கிட முடியாது. யு.ஜி.சி., விதிமுறைகளுக்கு அல்லது வேறு எந்த
சட்டப் பிரிவுகளுக்கும் முரணாக, இந்த அரசாணை இல்லை. எனவே, அரசாணையை ரத்து
செய்யத் தேவையில்லை. மனு, தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு, "டிவிஷன்
பெஞ்ச்' உத்தரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment