பீகாரில் சத்துணவு சாப்பிட்ட குழந்தைகள் இறந்த சம்பவத்தையடுத்து தமிழகத்தில் சத்துணவு மையங்களில் தரமான உணவு வழங்கப்படுவதையும், மையங்கள் சுகாதாரமாக செயல்படுவதையும் கண் காணிக்க குழுக்கள் அமைக்கப் பட்டுள்ளன. அனைத்து சத்துணவு மையங்களையும் ஆய்வு செய்ய அக்குழுக்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அக்குழு அளிக்கும் ஆய்வு அறிக்கை அடிப்படையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள கலெக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் சத்துணவு ஊழியர்கள் மதியம் 2 மணி வரை பள்ளியில் இருக்க வேண்டும். திறந்தவெளியில் சத்துணவு மையங்கள் செயல்பட கூடாது. சுகாதாரமாகவும், குடிநீர் வசதியும் இருக்க வேண்டும். பாத்திரங்கள் தூய்மையாக இருக்க வேண்டும். மாணவர்களை மரத்தடியிலோ, வரிசையில் நிற்க வைத்து உணவு அளிக்க கூடாது. பள்ளி வராண்டாவில் வைத்து மாணவர்களுக்கு உணவு பரிமாற வேண்டும். சுழற்சி முறையில் ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும்.
தரமான உணவு வழங்கப்படுவதை ஆய்வு செய்ய ஏற்கனவே கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அக்குழுவில் அரசு அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் இடம் பெற்றுள்ளனர். செயல்படாமல் உள்ள இந்த கண்காணிப்பு குழுக்களின் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும், சத்துணவு சாப்பிடும் மாணவ, மாணவிகளின் பெற்றோரில் விருப்பமுள்ள ஒருவர் அல்லது 2 பேர் சுகாதார முறையில் தரமான உணவு வழங்கப்படுவதை கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment