மத்திய அரசின் நிதியுதவியுடன் செயல்படும் அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்டத்தின் மூலம், ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்புக்கான கற்பித்தல் திறனை மேம்படுத்த, பல்வேறு நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகிறது.
இதில் இடைநிலைக்கல்வியில், பெரும்பாலான மாணவர்கள் தவிப்பாய் தவிக்கும் பாடம் கணிதம். இந்த கணிதப்பாடத்தை மாணவர்களுக்கு எளிமையாக நடத்துவது குறித்து, பல்வேறு நாடுகளில், இன்றும் ஆய்வு நடந்த வண்ணமே உள்ளது.
உலக நாடுகளில், கணிதத்தில் முதன்மை இடத்தை பிடிக்கும் சிங்கப்பூரில், சி.பி.ஏ., எனும் கான்கிரீட், பிக்சோரியல், அப்ஸ்ட்ராக் என்ற மூன்று முறைகளிலும், கணிதம் கற்பிக்கப்படுகிறது. நம் அரசு பள்ளிகளில், 'அப்ஸ்ட்ராக்' எனும் சுருக்கமாக தெரிவிக்கும் முறை மட்டுமே, அமலில் உள்ளது.தற்போது இப்புதிய முறையின் மூலம், மாணவர்களுக்கு கணிதம் எளிதாக புரியும் வகையில், கற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாநில அளவிலான கருத்தாளர்களுக்கான, மூன்று நாள் பயிற்சி முகாம், சேலம் விநாயகா மிஷன்ஸ் பொறியியல் கல்லுாரியில் தொடங்கியது. இதில் மாநிலம் முழுவதும் இருந்து கணித ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
இப்பயிற்சி குறித்து கணித ஆசிரியர்கள் கூறியதாவது:தற்போது பார்முலா வைத்து கணக்குக்கு தீர்வு காண்பது மட்டுமே, கற்றுக்கொடுக்கப்படுகிறது. அந்த பார்முலாவை வைத்து, அன்றாட வாழ்க்கையில், எவ்வாறு பயன்படுத்துவது என்பதை கற்றுக்கொடுக்கும் போது, கண்ணில் பார்க்கும் காட்சியில் எல்லாம் கணிதத்தை ஒப்பிட்டு பார்க்கும் திறனை வளர்க்க முடியும்.அதே போல், 'மேத்ஸ் கிட்' எனும் கணித உபகரணங்களை கொண்டும், எவ்வாறு எளிதாக கணிதம் கற்பிக்கலாம் என்பதையும் இப்பயிற்சியில் கற்றுக்கொடுக்கின்றனர்.
மேலும் மாவட்டத்துக்கு, 10 பள்ளிகளில் கணித ஆய்வகம் அமைக்க உபகரணங்கள் வழங்கப்பட்டுஉள்ளது. அதை கொண்டு, கணிதத்தை எளிதாக கற்றுக் கொடுக்கும் முறையும், இதில் கற்றுத்தரப்பட உள்ளது. சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் பயன்படுத்தப்படும், 'கான்கிரீட், பிக்சோரியல், அப்ஸ்ட்ராக்' ஆகிய முறைகளில் கணிதம் கற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்பட்டுஉள்ளது.இதனால், கணிதம் என்றாலே, கசப்பு மருந்தாய் நினைக்கும், மாணவர்களின் நிலை நிச்சயம் மாற்றம் பெறும். என்.சி.இ.ஆர்.டி., வகுத்துள்ள விதிமுறைகளின் படி, கணிதப்பாடத்தை எளிதாக கற்பிக்கும் வகையில், இப்பயிற்சி அமைந்துள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment