மாணவர்களுக்கு முன்னுதாரணமாக, வழிகாட்டியாக ஆசிரியர்கள் நடந்து கொள்ள வேண்டும். இதை மீறி, மாணவர்களிடம் தவறாக நடந்துகொண்டால், உடனடியாக, 'டிஸ்மிஸ்' செய்யப்படுவர்' என, கல்வித்துறை, எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த சில மாதங்களாக, கர்நாடகா, மகாராஷ்டிரா, டில்லி, உ.பி., உள்ளிட்ட, சில மாநிலங்களில், சிறுவர்களுக்கு எதிராக, குறிப்பாக, மாணவியருக்கு எதிரான குற்றங்கள், அதிகளவில் நடந்து வருகின்றன.சமீபத்தில், பெங்களூரில் உள்ள ஒரு தனியார் பள்ளி சிறுமி, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம், நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக, இரண்டு உடற்கல்வி ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்நிலையில், தமிழகத்தில், மாணவர்களுக்கு எதிரான குற்றங்கள் நடக்காமல் இருக்க, மாணவர்கள்,
ஆசிரியர்களுக்கு, உளவியல் ரீதியாக ஆலோசனை வழங்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
கவுன்சிலிங்:
பள்ளி கல்வித்துறை சார்பில், 10 'மொபைல் கவுன்சிலிங்' வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு, அதில், ஒரு வாகனத்திற்கு ஒருவர் வீதம், 10 உளவியல் நிபுணர்கள் பணியில் அமர்த்தப்பட்டு உள்ளனர்.இவர்கள், மாவட்ட வாரியாக, பள்ளிகளுக்கு சென்று, ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும், 'கவுன்சிலிங்' அளித்து வருகின்றனர். சில
மாதங்களுக்கு முன் சென்னையில் நடந்த, பள்ளி முதல்வர்கள், போலீஸ் அதிகாரிகள் கூட்டத்தில், 'மாணவர்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க, பள்ளிகளில், முக்கிய இடங்களில்,
'கேமரா' பொருத்த வேண்டும்' என, பள்ளி முதல்வர்களுக்கு, போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இரண்டாம் தர...:
பெரிய தனியார் பள்ளி களில் மட்டும், கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன.ஆனால், இரண்டாம் தர, கடைநிலையில் உள்ள தனியார் பள்ளிகளில், கேமராக்கள் பொருத்தவில்லை. அரசு பள்ளிகளில், கேமராக்களை பொருத்த, இதுவரை, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
திருட்டு:
இதுகுறித்து, அரசு பள்ளி ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது:அனைத்து அரசு பள்ளிகளிலும், இரவு நேர காவலர்கள் கிடையாது. இதனால், பல இடங்களில், 'லேப் - டாப்'களும், கம்ப்யூட்டர்களும் திருடு போகின்றன. இந் நிலையில், கேமராக்களை எங்கே பொருத்துவது?கேமராக்களை பொருத்துவது குறித்து,எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. விலை மதிப்புமிக்க கேமராக்களை பொருத்தினால், பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.'மொபைல் கவுன்சிலிங்' திட்டம், இன்னும் முழுமையாக, அனைத்து அரசு பள்ளிகளுக்கும் சென்றடையவில்லை. 32 மாவட்டங்களுக்கும் சேர்த்து, 10 வாகனங்கள் என்பது மிகவும் குறைவு.மொத்தம் உள்ள, 56,828 பள்ளிகளில், 45,366 பள்ளிகள், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள்.இவ்வளவு பள்ளிகளுக்கு, 10 வாகனங்கள், கண்டிப்பாக போதாது. குறைந்தது, மாவட்டத்திற்கு ஒரு, 'மொபைல் கவுன்சிலிங்' வாகனம் வேண்டும். அப்போது தான், மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும்; ஆசிரியர்களுக்கும்,
Advertisement உரிய உளவியல் கலந்தாய்வை அளிக்க முடியும்.இவ்வாறு, ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
எச்சரிக்கை:
இதற்கிடையே, பாலியல் குற்றச்சாட்டுகளில் சிக்கும் ஆசிரியருக்கு தண்டனை வழங்கும் அரசாணையை சுட்டிக்காட்டி, கல்வித்துறை, மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
'பாலியல் புகாரில் சிக்கினால், பணியில் இருந்து, 'டிஸ்மிஸ்' செய்யப்படுவர். மேலும், சம்பந்தப்பட்ட ஆசிரியரின் கல்வி சான்றிதழ்கள் அனைத்தும், உரிய துறைகளின் மூலம் ரத்து செய்யப்படும்' என்றும், கல்வித்துறை எச்சரித்துள்ளது.ஏற்கனவே, நாமக்கல் மாவட்டத்தில், சத்யபிரபு என்ற, அரசு நடுநிலைப்பள்ளி ஆசிரியர், பாலியல் புகார் காரணமாக, 'டிஸ்மிஸ்' செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
87 லட்சம் மாணவர்களில்: 1.66 லட்சம் பேருக்கு கவுன்சிலிங்அரசு பள்ளிகளில், 56.55 லட்சம் மாணவர்களும், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், 31.12 லட்சம் மாணவர்களும் படித்து வருகின்றனர். 87 லட்சம் மாணவர்களில், இதுவரை, 1.66 லட்சம் மாணவர்களுக்கு மட்டுமே, கவுன்சிலிங்அளிக்கப்பட்டுள்ளன.
இந்த புள்ளி விவரங்களை, கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இதுகுறித்த அறிக்கை விவரம்:இதுவரை, 802 பள்ளிகளை பார்வையிட்டு, 74,263 மாணவர்களுக்கும், 91,898 மாணவியருக்கும் என, 1,66,161 பேருக்கு, ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. 7,101 பேருக்கு, சிறப்பு கவுன்சிலிங் அளிக்கப்பட்டது.இவ்வாறு, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
87 லட்சம் மாணவர்களுக்கும், விரைந்து கவுன்சிலிங் அளிக்கும் வகையில், மொபைல் கவுன்சிலிங் வாகனங்களையும், உளவியல் நிபுணர்களின் எண்ணிக்கையையும் அதிகப்படுத்த, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
No comments:
Post a Comment