மாணவர்களுக்கு பாடம் கற்பிப்பதில், தற்போது புதிய முயற்சிகளை சில அரசு பள்ளி ஆசிரியர்கள் கையாண்டு வருகின்றனர். பாடங்களை கரும்பலகையில் எழுதி நடத்துவதைக் காட்டிலும், செயல்வழியாக நடத்துவதன் மூலம் மாணவர்கள் எளிதில் புரிந்து கொள்வதாக ஆசிரியர்கள் கூறுகின்றனர். பல பள்ளிகளில் இம்முயற்சி வெற்றி பெற்றுள்ளதாக ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.மாணவர்களுக்கு செயல்வழியாகவும், மனதில் எளிமையாக பாடங்களை பதிய வைப்பதற்கும் கல்வித்துறை சார்பில் ஆசிரியர்களுக்கு பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
செயல்வழியாக நடத்தினாலும், சில பாடங்களில் மாணவர்களின் ஆர்வம் குறைந்தே காணப்படுகிறது. ஆகவே மாணவர்கள் புரிந்து கொள்ள கடினமாக உள்ள இலக்கணம், கணிதத்தின் சில பகுதிகளை, 'அனிமேஷன்' முறையில் திரையிட்டு நடத்த, கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.இத்திட்டத்துக்காக, தகவல் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் ஆசிரியர்கள் 120 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கடினமாக உள்ள பாடங்களை அந்த ஆசிரியர்கள் தேர்வு செய்து, அதற்கேற்ற அனிமேஷன் அசைவுகளை கம்ப்யூட்டர் சர்வரில் பதிவு செய்ய உள்ளனர். இதை பயன்படுத்தி பிற ஆசிரியர்கள் மாணவர்களுக்கு அப்பாடங்களை கற்பிக்க, ஏற்பாடு செய்யப்படுகிறது.
கல்வித்துறை அதிகாரிகள் சிலர் கூறியதாவது: அடிப்படை கல்வி சிறந்ததாக இருந்தால் மட்டுமே, மாணவர்கள் பொதுத்தேர்வு மற்றும் பிற தேர்வுகளை எளிதாக எதிர்கொள்ள முடியும்.இதன் அடிப்படையில், மாணவர்களுக்கு கடினமாக உள்ள பாடங்களின் மீது ஆர்வம் உண்டாக்குவதற்கும், அப்பாடங்களை மாணவர்கள் எளிமையாக கற்றுக்கொள்வதற்கும் 'அனிமேஷன் ' பாடமுறை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. விரைவில், இத்திட்டம் அனைத்து பள்ளிகளிலும் நடைமுறைப்படுத்தப்படும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment