புதுச்சேரியைச் சேர்ந்த, பாரதி என்பவர், தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ், சில தகவல்களை, உயர் நீதிமன்றத்திடம் கோரினார். அவர் கோரிய தகவல்கள், ஆவணங்களை அளிக்கும்படி, பொது தகவல் அதிகாரியான, உயர் நீதிமன்ற பதிவாளருக்கு (நிர்வாகம்), மத்திய தகவல் ஆணையம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், பதிவாளர் (நிர்வாகம்) மனுத் தாக்கல் செய்தார். மத்திய தகவல் ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்த, 'டிவிஷன் பெஞ்ச்', பொதுவான கருத்துக்களை தெரிவித்திருந்தது. கடந்த, 17ம் தேதி, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.அதில், 'தகவல் கோரும் விண்ணப்பத்தில், குறைந்தபட்ச விவரங்கள் இருக்க வேண்டும் அல்லது தகவல் கோருவதற்கான காரணம் தெரிவிக்க வேண்டும்' என, குறிப்பிட்டிருந்தது. இந்நிலையில், அந்த உத்தரவை, தானாக முன் வந்து, நீதிபதிகள் என்.பால்வசந்தகுமார், ரவிச்சந்திரபாபு அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்', மறு ஆய்வுக்கு எடுத்து, பிறப்பித்த உத்தரவு: தகவல் பெறும் உரிமை சட்டத்தில், பிரிவு 6 (2)ஐ, கவனிக்காமல், பொதுவான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டது. இந்தச் சட்டப்பிரிவின்படி, தகவல் கோருபவர், காரணம் தெரிவிக்க வேண்டியதில்லை.எனவே, நீதிமன்றம் தெரிவித்த பொதுவான கருத்து, தவறானது. உத்தரவு பிறப்பித்த பின், இந்த தவறை, நாங்கள் கவனித்தோம். மறுஆய்வு செய்ய, விசாரணைக்கு பட்டியலிட, பதிவுத் துறைக்கு உத்தரவிடப்பட்டது.எங்கள் உத்தரவில், இரண்டு பத்திகளில் தெரிவித்துள்ள, பொதுவான கருத்துக்கள், தகவல் பெறும் உரிமை சட்டப் பிரிவு 6 (2)க்கு எதிரானது. இந்த, இரண்டு பத்திகளையும், உத்தரவில் இருந்து நீக்க வேண்டும். அதை நீக்கி விட்டு, சரி செய்த உத்தரவின் நகலை, பதிவுத் துறை வழங்க வேண்டும்.இவ்வாறு, 'டிவிஷன் பெஞ்ச்' உத்தரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment