தமிழகத்தில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும், ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களை பணி நீக்கம் செய்ய, பள்ளி கல்வி இயக்குனர் 7ம் தேதி உத்தரவிட்டார். இந்த உத்தரவின் அடிப்படையில், அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும், தகுதி தேர்வில் வெற்றிப்பெறாத ஆசிரியர்களின் நியமனத்தை ரத்து செய்யவும், அவர்களுக்கு வழங்கப்பட்ட ஊதியத்தை திரும்பப் பெறவும் மாவட்ட கல்வி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதையடுத்து, தகுதி தேர்வில் வெற்றிபெறாத ஆசிரியர்களை பணி நீக்கம் செய்யும் உத்தரவை ரத்து செய்யக்கோரி, தேனி நாடார் சரஸ்வதி மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் சுப்பிரமணிய சிவா உட்பட பலர், ஐகோர்ட் மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்தனர்.மனுவில், ‘எங்களுக்கு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற 5 ஆண்டுகள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அந்த கெடு முடிவதற்கு முன்பு, தகுதி தேர்வில் வெற்றி பெறவில்லை என்ற காரணத்தை கூறி பணி நீக்கம் செய்ய உத்தரவிட்டது சட்டவிரோதம். எனவே, தகுதி தேர்வில் தேர்ச்சிபெறாத ஆசிரியர்களை பணி நீக்கம் செய்ய, பள்ளி கல்வி இயக்குனர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். அந்த உத்தரவின் அடிப்படையில் மாவட்ட கல்வி அதிகாரி அனுப்பிய நோட்டீசை ரத்து செய்யவேண்டும்‘ என கூறப்பட்டிருந்தது.
இந்த மனுக்களை நீதிபதி நாகமுத்து விசாரித்தார். மனுதாரர்கள் சார்பில் வக்கீல் ஐசக்மோகன்லால், சேவியர் ரஜினி, லஜபதிராய், லூயிஸ் ஆஜராகினர். மனுவை விசாரித்த நீதிபதி, அரசின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். இதே கோரிக்கைக்காக, மதுரையை சேர்ந்த ஆசிரியர்கள் முருகன், பிரேமலதா, ராம்சங்கர், சதீஷ்குமார், உமா, புவனேஸ்வரி, நாகராஜன் மற்றும் தஞ்சாவூர் ஆசிரியர் ரவிச்சந்திரன் ஆகியோர், சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி கிருபாகரன், பள்ளி கல்வி இயக்குனர் நவ. 7ல் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுக்கக் கூடாது என அதிகாரிகளுக்கு அறிவுறுத்துமாறு அரசு வக்கீலுக்கு உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment