பணியில் இருக்கும் போது அரசு ஊழியர்கள் இறந்தால், அவர்களது வாரிசுகளுக்கு தகுதி அடிப்படையில் வேலை வழங்க வேண்டும் என்று
சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எம்.சுதா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விரம்: திருவண்ணாமலை மாவட்டம் அகரம் பள்ளிப்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், சத்துணவு சமையலராக எனது தாய் பணிபுரிந்தார். கடந்த 2004-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 26-ஆம் தேதி பணியிலிருக்கும் போது அவர் இறந்தார். அரசு பணியின் போது எனது தாய் இறந்ததால், கருணை அடிப்படையில் அந்த வேலையை எனக்கு வழங்க வேண்டும் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தேன். அதில்,சத்துணவு அமைப்பாளர் பணி வழங்க வேண்டும் எனக் கோரியிருந்தேன்.
மாவட்ட ஆட்சியரும் அந்த மனுவை ஏற்றுக் கொண்டு 2009-ஆம் ஆண்டு அரசுக்கு பரிந்துரைத்தார். ஆனால், சமையலர் அல்லது சமையல் உதவியாளர் பணியில் தான் நியமிக்க முடியும்,சத்துணவு அமைப்பாளராக நியமிக்க முடியாது எனக் கூறி சமூக நலத்துறை எனது கோரிக்கையை மறுத்து விட்டது. அதனால்,கருணை அடிப்படையில் சத்துணவு அமைப்பாளர் வேலை வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு முன்பு நடந்து வந்தது. விசாரணைக்குப் பிறகு நீதிபதி பிறப்பித்த உத்தரவு: இறந்த அரசு ஊழியர்களின் பதவியைப் பொறுத்து அவர்களது வாரிசுகளுக்கு வேலை வழங்கக் கூடாது. வாரிசுகளின் தகுதி அடிப்படையில் அவர்களுக்கு வேலை வழங்க வேண்டும். அதனால், மனுதாரின் தகுதி அடிப்பைடையில் 8 வாரங்களுக்குள் அவருக்கு சத்துணவு அமைப்பாளர் வேலை வழங்க வேண்டும் என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment