ஓட்டுச்சாவடியில் பணிபுரியும் அலுவலர்களுக்கான பணி ஆணையை தேர்தல் கமிஷன் அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு வழங்கி உள்ளது. தாலுகா அளவில் அவை பிரித்து வழங்கும் பணி நடக்கிறது.
தமிழகத்தில், ஏப்ரல், 24ம் தேதி லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவு நடக்கிறது. மொத்தம், புதிய வாக்காளர் சேர்க்காமல், 5.37 கோடி வாக்காளர்கள் உள்ளனர். 60 ஆயிரத்து 418 ஓட்டுச்சாவடி மையங்கள் உள்ளன. ஒவ்வொரு ஓட்டுச்சாவடி மையத்துக்கும், 5 பேர் வீதம் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் பணியமர்த்தப்பட உள்ளனர்.
தமிழகம் முழுவதும், 3 லட்சத்து 2 ஆயிரத்து 90 பேர் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களாக நியமிக்கப்பட உள்ளனர். ஓட்டுச்சாவடி அலுவலர்கள் விடுப்பில் செல்ல நேரிட்டால், அதை சமாளிக்க கூடுதலாக, 20 சதவீதம் ஓட்டுச்சாவடி அலுவலர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களை கம்ப்யூட்டர் மூலம் "ரேண்டம்' முறையில் தேர்வு செய்யும் பணி அந்தந்த கலெக்டர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடந்தது. இவர்களுக்கு பணி நியமன ஆணையை தேர்தல் கமிஷன் வழங்கி உள்ளது.
ஒவ்வொரு பணி நியமன ஆணையிலும், ஓட்டுச்சாவடி விவரம், பணியாளரின் முகவரி, ஃபோன் எண்ணுடன் முழுவிவரம் இடம் பெற்றுள்ளது. பணி ஆணையுடன், நிலை அலுவலர்களுக்கான தபால் ஓட்டுப் படிவம் 12-ஏ இடம் பெற்றுள்ளது.
இந்த பணி ஆணை, தபால் ஓட்டு படிவம் இரண்டையும் "பின்' செய்து, ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களுக்கு வழங்கும் பணியில் அந்தந்த தாலுகா தாசில்தார்கள் ஈடுபட்டுள்ளனர்.
திருச்சி மாவட்டத்தில், 2,319 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. இதுவரை, 11 ஆயிரத்து 410 அரசு ஊழியர், ஆசிரியர்கள் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதுதவிர, 20 சதவீதம் பேர் கூடுதலாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment