ஆசிரியர் தேர்வு வாரியம், 2,895 முதுகலை ஆசிரியர் தேர்வுப் பட்டியலை விரைவில் வெளியிட உள்ள நிலையில், முன்னுரிமை அடிப்படையில், தமிழ் வழியில் படித்தவருக்கு, 20 சதவீதம் பணியிடங்களை ஒதுக்க வேண்டும். ஆனால்,
இவர்களின் எண்ணிக்கை ஒற்றை இலக்கத்தில் இருப்பதால், இந்த இடங்கள், பொதுப்பிரிவுக்கு மாற்றப்பட உள்ளன.அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள, 2,895 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, மே மாதம் போட்டித் தேர்வு நடந்தது. 1.5 லட்சம் பேர் பங்கேற்ற தேர்வில் இருந்து, 3,100 பேர், சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப் பட்டனர். வரும், 20ம் தேதிக்குள், இறுதி தேர்வுப் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.
"மொத்த பணியிடங்களில், தமிழ் வழியில் படித்தவருக்கு, 20 சதவீதம் முன்னுரிமை' என்ற அரசாணைப்படி, 575 பணியிடங்கள் ஒதுக்க வேண்டும். ஆனால், தமிழ் வழியில் படித்தவர் எண்ணிக்கை ஒற்றை இலக்கத்தில் இருப்பதாகவும்; இதனால், ஒதுக்கீடு போக மீதமுள்ள பணியிடங்கள், பொதுப் பிரிவுக்கு மாற்றப்படும் எனவும், ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.
தி.மு.க., உத்தரவு
முந்தைய தி.மு.க., ஆட்சியில், தமிழ் செம்மொழி மாநாடு நடந்தபோது, தமிழ் மொழியை வளர்க்கும் நோக்கில், "தமிழ் வழியில் படிப்பவர்களுக்கு, அரசு வேலை வாய்ப்புகளில், 20 சதவீதம் முன்னுரிமை அளிக்கப்படும்' என்ற அரசாணை வெளியிடப் பட்டது.அதைத் தொடர்ந்து, தமிழ் வழியில் படித்தவர்கள் எனக் கூறி, சிலருக்கு வேலை வாய்ப்பு உத்தரவுகள் வழங்கப் பட்டன. உயர்ந்த பணி, அதிக எண்ணிக்கை என்ற அளவில், இந்த அரசாணையால் இதுவரை யாரும் பலன் அடையவில்லை.
எந்தப் பணிக்கு தேர்வு நடக்கிறதோ, அந்தப் பணிக்கான கல்வித் தகுதியாக, 10ம் வகுப்பில் இருந்து, தமிழ் வழியில் படித்திருக்க வேண்டும். இது, நடைமுறை ரீதியில் சாத்தியம் இல்லாதது. இதைப் பற்றி முன்கூட்டியே ஆராயாமல், கருணாநிதி ஆட்சியில் கொண்டு வரப்பட்ட அரசாணையால், இன்று வரை பெரிய அளவில் யாருக்கும் பயனளிக்காத நிலை உள்ளது.
அரசாணை கூறுவது...
ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் கூறியதாவது:முதுகலை ஆசிரியர் பணி என்றால், 10ம் வகுப்பு, பிளஸ் 2, இளங்கலை பட்டப்படிப்பு, முதுகலை பட்டப்படிப்பு மற்றும் பி.எட்., ஆகிய அனைத்தையும், தமிழ் வழியில் படித்திருக்க வேண்டும். அப்படி படித்தவர் மட்டுமே, சிறப்பு அரசாணை ஒதுக்கீட்டின் கீழ் வர முடியும்.
இதை புரிந்து கொள்ளாமல், ஏராளமானோர், தமிழ் வழியில் படித்ததாக, சான்றிதழ் சரிபார்ப்பின்போது கொடுத்த தகவல் பட்டியலில் பதிவு செய்துள்ளனர்.
ஆய்வு செய்ததில், அவ்வளவு பேரும், ஏதாவது ஒரு படிப்பை, ஆங்கில வழியில் படித்தவராக உள்ளனர் அல்லது ஒரு சில படிப்புகளை ஆங்கிலத்தில் படித்திருக்கின்றனர்.எனவே, அவர்களை சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் கொண்டு வர முடியாது.இவ்வாறு தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.
பிரச்னை என்ன?
தமிழ்நாடு முதுகலை ஆசிரியர் கழகத்தின் தலைமை நிலையச் செயலர் பூபாலன் கூறியதாவது:
முதுகலை பட்டப்படிப்பு மற்றும் பி.எட்., படிப்பில், தமிழ், வரலாறு, பொருளியியல் ஆகிய பாடங்களைத் தவிர, கணிதம், இயற்பியல், வேதியியல் உள்ளிட்ட இதர பாடங்களை, தமிழ் வழியில் படிப்பதற்கான வாய்ப்புகள் இல்லை. அது தான், பிரச்னைக்கு காரணம். வணிகவியலில் கூட, தமிழ் வழி பாடப்பிரிவு இல்லை. பற்று, வரவு என, முதுகலையில் யாரும் படித்துக் கொண்டிருக்க முடியாது. அப்படியே படித்தாலும், வகுப்பு குறிப்புகளை தயாரிப்பதில், பெரும் குழப்பங்கள் ஏற்படும்.சில கல்லூரிகளில், இளங்கலை அளவில், சில பாடங்களை தமிழ் வழியில் கொண்டு வந்தனர்; பின், அப்படியே விட்டுவிட்டனர். இப்படி இருக்கையில், முதுகலையில் தமிழ் வழி படிப்பு கேள்விக்குறி தான்.முதுகலை வரை, தமிழ் வழியில் படிக்க வேண்டும் என்ற நிபந்தனையை, பிளஸ் 2 வரை என்றளவில் குறைத்தால், கிராமப்புற மாணவர் உட்பட அதிகமான பட்டதாரிகள் பயனடைவர்.இவ்வாறு பூபாலன் கூறினார்.
No comments:
Post a Comment