நடந்து முடிந்த பிளஸ் 2 தமிழ் முதல்தாள் தேர்வில், கடந்த ஆண்டு கேள்விகளை அப்படியே கேட்டு, தேர்வுத்துறை, "சாதனை' படைத்தது. இதனைத் தொடர்ந்து, நேற்று நடந்த பத்தாம் வகுப்பு தமிழ் இரண்டாம் தாள் தேர்வில், ஐந்து மதிப்பெண்களுக்குரிய, வங்கி மாதிரி படிவத்தை, கேள்வித்தாளுடன், மாணவர்களுக்கு வழங்காமல், மாநிலம் முழுவதும், மாபெரும் குளறுபடியை செய்தது தேர்வுத்துறை.
கேள்வி விவரம்: தமிழ் இரண்டாம் தாள் தேர்வில், பகுதி ஆறில், 38வது கேள்வியாக, வங்கி செலானை பூர்த்தி செய்யும் கேள்வி இடம்பெறுகிறது. வங்கியில், பணம் போடுவது, எடுப்பது தொடர்பான அறிவு, மாணவர்களுக்கு வளர வேண்டும் என்பதற்காக, இந்த கேள்வி, புதிய பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டது. அதன்படி, தேர்வின்போது, கேள்வித்தாளுடன், பூர்த்தி செய்யப்படாத, வங்கி செலானும், மாணவர்களுக்கு விநியோகிக்கப்படும். மாணவர்கள், அந்த செலானில், தங்களது பதிவு எண்களை பூர்த்தி செய்து, செலானில், காலியாக உள்ள இடங்களில், தேவையான விவரங்களை பூர்த்தி செய்து, விடைத்தாளுடன் இணைத்து, அறை கண்காணிப்பாளரிடம் வழங்குவர். இந்த கேள்விக்கு, ஐந்து மதிப்பெண்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. நேற்று நடந்த தமிழ் இரண்டாம் தாள் தேர்வில், இந்த வங்கி செலான், மாணவர்களுக்கு வழங்காதது, தேர்வு துவங்கிய, அரை மணி நேரத்தில், தேர்வுத்துறைக்கு தெரிய வந்தது. சென்னையில், கேள்வித்தாள் கட்டுகளை பிரித்த அதிகாரிகள், கேள்வித்தாளுடன், வங்கி செலான் இல்லாததை கண்டு திடுக்கிட்டனர். உடனடியாக, தேர்வுத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
மாநிலம் முழுவதும் பரபரப்பு: சென்னையில் மட்டும், சில மையங்களில், இப்படி நடந்திருக்கும் என, தேர்வுத்துறை கருதியது. ஆனால், சில நிமிடங்களில், சென்னை முழுவதும் மட்டுமில்லாமல், மாநிலம் முழுவதும், புதுச்சேரி முழுவதும், வங்கி செலான், கேள்வித்தாள் கட்டுகளுடன் இணைக்கப்படவில்லை என்ற அதிர்ச்சி தகவல், தேர்வுத்துறை இயக்குனருக்கு வந்தது. உடனடியாக, உயர் அதிகாரிகளுடன்,
தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி ஆலோசனை கேட்டு, உயர்மட்ட ஆலோசனைப்படி, "கேள்வி எண்ணை எழுதி, வங்கி செலானில் என்னென்ன விவரங்களை பூர்த்தி செய்வார்களோ, அதை, அப்படியே, விடைத்தாளில் எழுதினால் போதும்; ஐந்து மதிப்பெண்கள், சுளையாக வழங்கிவிடுவோம்' என்ற தகவலை, மாணவர்களுக்கு தெரிவிக்க உத்தரவிட்டார். அதன்படி, அடுத்த அரை மணி நேரத்தில், இத்தகவல், மாநிலம் முழுவதும் தெரிவிக்கப்பட்டது. இந்த குளறுபடி விவகாரத்தில், வழக்கம்போல் மழுப்பலுடன், ஒதுங்கிக்கொள்ளாமல், "கேள்வியை தொட்டிருந்தாலே, அதற்குரிய ஐந்து மதிப்பெண்களை முழுமையாக வழங்குவோம்' என, தேர்வுத்துறை, உடனடியாக அதிகாரபூர்வமாக அறிவித்தது.
இயக்குனர் அறிவிப்பு: இது தொடர்பாக, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி வெளியிட்ட அறிவிப்பு: கேள்வி எண் 38க்கு உரிய வங்கி படிவம், கேள்வித்தாளுடன் இணைக்கப்படவில்லை. மாணவர்கள், கேள்வி எண்ணை எழுதி, வங்கி படிவத்தில் பூர்த்தி செய்ய வேண்டிய விவரங்களை மட்டும், வரிசை எண்ணிட்டு எழுதிட, உரிய அறிவுரைகள், அனைத்து மையங்களுக்கும் வழங்கப்பட்டன. இந்த கேள்வி தொடர்பாக, தமிழ் இரண்டாம் தாள் விடைத்தாளை மதிப்பீடு செய்யும் மதிப்பீட்டாளர்களுக்கு, உரிய அறிவுரைகள், விடை குறிப்புகள் (கீ-ஆன்சர்) மூலம் வழங்கி, மேற்படி கேள்வியை, மாணவர்கள் எழுத முயற்சி செய்திருந்தால், அந்த கேள்விக்குரிய ஐந்து மதிப்பெண்களும் முழுமையாக வழங்கப்படும். இதனால், மாணவர்கள், எவ்வித குழப்பமோ, கலக்கமோ அடையத் தேவையில்லை. இவ்வாறு இயக்குனர் தெரிவித்துள்ளார்.
திறமையின்மை காரணமா? கேள்வித்தாள், "லீக்', விடைத்தாள் கட்டுகள் காணாமல் போவது, விடைத்தாள் கட்டுகள், திடீரென தீயில் எரிந்து சாம்பலாவது என, கடந்த சில ஆண்டுகளாகவே, பொதுத்தேர்வுகளில், தொடர்ந்து குளறுபடிகளும், குழப்பங்களும் நடந்து வருகின்றன. இருபது லட்சம் பேருக்கு தேர்வுகள் நடத்துவது சாதாரணமான வேலை கிடையாது என்பது உண்மை என்றாலும்,
பல தவறுகள், துறையின் மெத்தனம் காரணமாகவும், திறமையின்மையின் காரணமாகவும் நடக்கின்றன என, துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
"சலான்' கதி குறித்து விசாரணை: பொதுத்தேர்வுகளுக்கான கேள்வித்தாள்கள், மே.வங்கம், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில், ரகசியமான முறையில் அச்சிடப்படுகின்றன. பக்கத்து மாநிலங்களில் கூட அச்சிடப்படுவதில்லை. 10ம் வகுப்பு தேர்வை, பள்ளிகள் மூலம், 10.68 லட்சம் மாணவர்களும், தனித்தேர்வு மூலம், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களும் எழுதுகின்றனர். இதன்படி, 11 லட்சத்திற்கும் அதிகமாக, வங்கி சலானை அச்சடிக்க, தேர்வுத்துறை, "ஆர்டர்' வழங்கி உள்ளது. இந்த சலான்கள் அச்சடிக்கப்பட்டு, கேள்வித்தாளுடன் இணைத்து, தேர்வு மையங்களுக்கு சென்றிருக்க வேண்டும். ஆனால், வெறும் கேள்வித்தாள்கள் மட்டுமே, அனைத்து மையங்களுக்கும் சென்றுள்ளன. ஒரு வங்கி சலான் கூட, எந்த மையத்திற்கும் செல்லவில்லை. எனவே, வங்கி சலான் அச்சடிக்கவில்லையா அல்லது அச்சடிக்கப்பட்ட சலான்கள், கேள்வித்தாள்களுடன் இணைக்க, அச்சகம் மறந்துவிட்டதா என, தெரியவில்லை. இது குறித்து, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராவிடம் கேட்டபோது, ""ஆர்டர் கொடுத்தோம்; ஆனால், கேள்வித்தாளுடன் வரவில்லை. என்ன நடந்தது என, தெரியவில்லை. இது குறித்து, முழுமையாக விசாரணை நடத்தப்படும்,'' என, தெரிவித்தார்.
No comments:
Post a Comment