மும்பை மாநகராட்சி சார்பில், 2013 - 14ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதில், மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும், நான்கு லட்சம் மாணவர்களுக்கும், வங்கிக் கணக்கு துவங்கப்பட்டு, "டெபிட்' கார்டுகள் வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.கடந்த, 2007 - 08ம் கல்வி ஆண்டு முதல், மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு, அரசின் சார்பில், புத்தகம், சீருடை, காலணிகள், பென்சில் உள்ளிட்ட, 27 வகை பொருட்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன.வரும் கல்வி ஆண்டிலிருந்து, இவை அனைத்தும் பணமாக வழங்கப்பட உள்ளது. இதில், முறைகேடுகள் நடைபெறாமல் இருக்கவும், மாணவர்கள் முழு பலன் அடையும் வகையிலும், மாணவர்களின் பெயரில், வங்கிக் கணக்கு துவங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, மாநகராட்சி பள்ளிகளில் பயிலும், நான்கு லட்சம் மாணவர்களுக்கு, வங்கி சேவை வழங்க, பிரபல வங்கிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.இது தொடர்பாக, மும்பை மாநகராட்சி ஆணையர் சீதாராம் குன்ட் கூறியதாவது:மாநகராட்சி பள்ளிகளில் பயிலும், அனைத்து மாணவர்களுக்கும், வங்கிக் கணக்கு துவங்கப்பட்டு, டெபிட் கார்டு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்த டெபிட் கார்டுகளின் மூலம், மாணவர்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை மட்டுமே வாங்க முடியும்; பணம் எடுக்க முடியாது. எனவே, மாணவர்கள், வேறு காரணங்களுக்காக செலவு செய்ய முடியாது. பெற்றோரும், பிள்ளைகளுக்கு வழங்கப்படும் பணத்தை வேறு வழியில் செலவிட முடியாது.இவ்வாறு சீதாராம் குன்ட் கூறினார்.
No comments:
Post a Comment