டில்லி மாணவி பாலியல்பலாத்கார சம்பவம் எதிரொலியாக, கல்லூரிகளில் துறைவாரியாக மாணவிகளின் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக கல்லூரி கல்வி இயக்குநர் அலுவலகத்தில் இருந்து, கல்லூரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள அறிக்கை: கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில்,
டீன் ஏஜ் பருவத்தில் ஏற்படும் இனக்கவர்ச்சி, மின்னனு ஊடகங்களின் தூண்டுதல் மற்றும் அறியாமையால், கல்வி மற்றும் குறிக்கோள்களில் இருந்து விலகி, எதிர்காலம் பாதிக்கும் வகையில், மாணவிகள் நடந்து கொள்ள வாய்ப்புண்டு. இதை தடுக்க, பாதுகாப்பு சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம். இச்சூழலை தவிர்க்க, மாணவிகளுக்கு ஆலோசனை தேவை. தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு கல்லூரியிலும், வகுப்புதோறும் துறை சார்ந்த மூத்த ஆசிரியையை பொறுப்பாளராக நியமித்து, மாணவிகளின் குறைகளை களைய வேண்டும். மாணவிகளின் நடவடிக்கைகளில் திடீர் மாறுதல் தெரிந்தால், தனியே அழைத்து ஆலோசனை தர வேண்டும். மாணவிகளின் குடும்ப சூழல், கற்றல் திறன், வருகை போன்றவற்றை கண்காணிக்கவேண்டும். தேவைப்பட்டால், மாநில மகளிர் ஆணையத்தின் உதவியை பெற்று, சிறப்பு கூட்டம் நடத்தலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அவினாசிலிங்கம் மகளிர் பல்கலை துணைவேந்தர் ஷீலா ராமச்சந்திரன் கூறியதாவது : பெண்களின் நடவடிக்கைகள், ஆடைகள் சார்ந்த கட்டுப்பாடு இல்லாமை போன்றவை, பாலியல் வன்கொடுமைக்கான காரணங்களாக ஏற்றுக் கொள்ள இயலாது. ஆண், பெண் இருவரும் மனிதர்களே. திறமைகளை கொண்டு மனிதர்களை அடையாளம் காணவேண்டும்; ஆடைகளை கொண்டு அல்ல. இவ்வாறு அவர்கூறினார். கோவை மாவட்டத்தில் உள்ள, 89 கலை கல்லூரிகள், பல்கலைக் கழகங்களில், துறைவாரியாக பொறுப்பாசிரியர்கள் நியமிக்கப்பட்டு, மண்டல கல்லூரி கல்வி இயக்குநரகத்துக்கு, பட்டியல் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment