முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரால், கடந்த, 30 ஆண்டுகளுக்கு முன், பள்ளி மாணவர் எண்ணிக்கையை உயர்த்தும் வகையில், சத்துணவு திட்டம் செயல்படுத்தப்பட்டது. இத்திட்டத்தில், சிறிய மாற்றங்கள் அவ்வப்போது செய்யப்பட்டன. சத்துணவு திட்டத்தில், 2010-11ம் ஆண்டில், 54.80 லட்சம் மாணவ, மாணவியர் பயனடைந்தனர். ஆனால், அடுத்தாண்டில், பயனாளிகள் எண்ணிக்கை, 50.14 லட்சமாக குறைந்தது. இதுகுறித்து, சமூக நலத்துறையினர் ஆய்வு செய்தனர். அப்போது, வீடுகளில் பெற்றோர் சமைக்கும் உணவை விட, பள்ளிகளில் வழங்கப்படும் உணவின் தரம் குறைவாக உள்ளதாக கூறி, இதை தவிர்த்து வருவது கண்டறியப்பட்டது. இதனால், பள்ளிகளில் இடை நிற்றல் அதிகரித்துள்ளதும் உணரப்பட்டது. இதையடுத்து, வீடுகளில் சமைக்கப்படும், புளி சாதம், லெமன் சாதம் உள்ளிட்ட கலவை உணவு வகைகளை, பள்ளிக் குழந்தைகள், அங்கன்வாடி குழந்தைகள் விரும்பி உண்பதை கருத்தில் கொண்டு, அதை சத்துணவுத் திட்டத்தில் அமல்படுத்த முடிவெடுக்கப்பட்டது.
சமையற்கலைஞர்கள், சென்னை சைதாப்பேட்டை மற்றும் ஸ்ரீரங்கம், அந்தநல்லூர் ஊராட்சி பள்ளியிலும், பல வகை உணவுகளை தயாரித்து காட்டினர். இவற்றை, பள்ளி மாணவர்கள் ஆர்வமுடன் உண்டனர். தொடர்ந்து, கடந்த நவ., 2ம் தேதி சட்டசபையில், முதல்வர் ஜெயலலிதா, 13 வகை கலவை உணவுகள் மற்றும் நான்கு வகை முட்டை மசாலாக்கள் சத்துணவு திட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக அறிவித்தார்.
செயல்படுத்த முடிவு : இதைத் தொடர்ந்து, அனைத்து மாவட்டங்களிலும் உள்ள, சத்துணவு அமைப்பாளர்கள், சமையலர்கள், சமையல் உதவியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு, முதல்கட்டமாக, மாவட்டத்திற்கு ஒரு பகுதியில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தை, இம்மாதம், 17ம் தேதி, எம்.ஜி.ஆர்., பிறந்த தினத்தில் துவக்கி வைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இத்திட்டத்தில், "அட்சயப் பாத்திரம்' என்ற சிறப்பு திட்டத்தையும் சேர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பயனாளிகளான, பள்ளி மாணவர்களும் பங்கு கொள்ளும் விதத்தில், இந்த திட்டம் செயல்படும். வீட்டில் அன்றாடம் மீதமாகும் காய்கறிகள், வீட்டில் விளையும் காய்கறிகளை தாங்களாகவே முன்வந்து, பள்ளியில் அல்லது அங்கன்வாடி மையங்களில் வைக்கப்பட்டுள்ள, பாத்திரத்தில் போட ஏற்பாடு செய்யப்படும்.
அந்த காய்கறியை, அன்றாட சமையலுக்கு பயன்படுத்த வேண்டும். முன்னதாக, அங்கன்வாடி மையங்களில் மட்டும் அறிமுகப்படுத்தப்பட இருந்தது; ஆனால் நடைபெறவில்லை. தற்போது, புதிய சத்துணவுத் திட்டத்தில், மீண்டும் "அட்சயப் பாத்திரம்' சேர்க்கப்பட்டுள்ளது. இதில், பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்கள் என, இரண்டிலும், இப்பாத்திரங்கள் வைக்கப்பட்டு, காய்கறிகள் பெறப்பட உள்ளது.
மிக்சி வாங்கலாம் : இதுகுறித்து, சத்துணவுத் திட்ட அதிகாரி ஒருவர் கூறியதாவது: குழந்தைகள் மற்றும் பள்ளி மாணவர்களிடையே, கொடுத்து, வாங்கும் பழக்கத்தை ஏற்படுத்தவே, சத்துணவு திட்டத்தில், "அட்சய பாத்திரம்' அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. புதிய சத்துணவு திட்டத்திற்கான, பாத்திரங்கள் வாங்க, பள்ளிகளுக்கு, 5,000 ரூபாய் மற்றும் அங்கன்வாடி மையங்களுக்கு, 2,000 ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. சிறப்பு திட்ட செயலாக்கத் துறையின் மூலம், மிக்சி வாங்கி தர, அறிவுறுத்தப்பட்டுள்ளது. இம்மாத இறுதிக்குள், அனைத்து சத்துணவு மையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்களுக்கு இவை வழங்கப்பட்டு விடும். சமையலர்களுக்கு பயிற்சியுடன், உணவுக்கான மெனு குறித்த, விளக்கம் அடங்கிய, "சிடி' வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment