இந்தப் பள்ளிகளுக்கு அங்கீகாரம் இல்லாததால், இவற்றில் பயிலும் மத்திய அரசு ஊழியர்களின் குழந்தைகளுக்கு, மத்திய அரசின் கல்வி உதவித்தொகை கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.
மத்திய அரசில் பணியாற்றும் கடைநிலை ஊழியர்கள் முதல், மேலதிகாரிகளின் குழந்தைகள் வரை, அனைத்து குழந்தைகளுக்கும், ஆண்டுதோறும், கல்வி (சி.இ.ஏ., சென்ட்ரல் எஜுகேஷனல் அலவன்ஸ்) உதவித்தொகை வழங்கப்படுகின்றன. முதல் வகுப்பில் துவங்கி, பிளஸ் 2 வரை, இந்த கல்வி உதவித்தொகையை பெறலாம்.மொழி, இனப் பாகுபாடின்றி, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் அனைவரும், இந்த கல்வி உதவித்தொகை பெற தகுதி பெற்றவர். கடந்தாண்டு வரை,
12 ஆயிரம் ரூபாயாக இருந்த, கல்வி உதவித்தொகை, தற்போது, 15 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டது.
அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் பயிலும், மாணவ, மாணவியர் மட்டுமே, இந்த கல்வி உதவித்தொகையை பெற முடியும். ஓராண்டில், நான்கு தவணை அல்லது ஆண்டு இறுதியில், ஒரே தவணையாகவும் உதவித்தொகையை பெறலாம்.
பள்ளிக் கட்டணம், சீருடை, டியூஷன் உள்ளிட்ட கட்டணங்கள் செலுத்தியதற்கான ரசீதுகளை பெற்று, அதை, பணியாற்றும் துறையின் கணக்குப் பிரிவில் சமர்ப்பித்து, அத்தொகையை, ஊழியர் பெற்றுக் கொள்ளலாம். இதற்கு, பள்ளியின் அங்கீகாரம் மிக முக்கியம்.
கடந்த, 2009ல், அனைவருக்கும் இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியது.அதன்படி, தனியார் நர்சரி, பிரைமரி, நிதியுதவி, சுயநிதி பள்ளிகள் அனைத்தும், தன் அங்கீகாரத்தை, மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும். அவ்வாறு, அங்கீகாரம் புதுப்பிக்கப்பட்ட பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு மட்டுமே கல்வி உதவித்தொகை கிடைக்கும்.
ஆனால், பள்ளிக் கல்வித்துறையின் கீழ், 1,000 பள்ளிகளும், மெட்ரிகுலேஷன் இயக்குனரகத்தின்கீழ், 600 பள்ளிகளும், தொடக்கக் கல்வித்துறையின் கீழ், 1,000 பள்ளிகளும், அங்கீகாரத்தை புதுப்பிக்காமல் இயங்கி வருவதாக, சம்பந்தப்பட்ட துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இதனால், இப்பள்ளிகளில் பயிலும் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியருக்கு, மத்திய அரசின் கல்வி உதவித்தொகை கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.
கல்வி உதவித்தொகை பெற முடியாத சிலர் , தகவல் அறியும் உரிமை சட்டத்தில், இதுகுறித்து விளக்கம் கேட்டபோது, அங்கீகாரம் பெறாத பள்ளிகள் குறித்த தகவல் தெரியவந்தது.
தனியார் பள்ளி நிர்வாகி ஒருவர் கூறும்போது, "சேலம் மாவட்டத்தில், 24 பள்ளிகளின் அங்கீகாரம் புதுப்பிக்கப்படவில்லை. புதுப்பிக்க விண்ணப்பித்து, பல மாதங்கள் ஆகியும், அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. அதனால், மத்திய அரசு ஊழியர்களின் குழந்தைகள் கல்வி உதவித்தொகை பெறமுடியாத நிலை உள்ளது&' என்றார்.
முதன்மைக் கல்வி அதிகாரி ஈஸ்வரன் கூறும்போது, "சங்ககிரி மற்றும் சேலம் கல்வி மாவட்ட அதிகாரிகளிடம் இருந்து, அதற்கான கோப்புகள் இன்னும் வரவில்லை. வந்ததும், அங்கீகாரம் வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்&' என்றார்.
கல்வித்துறை வட்டாரங்கள் கூறும்போது, "அடுத்த கல்வியாண்டு துவங்குவதற்குள், அனைத்துப் பள்ளிகளும், அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும். அதன்பிறகும் நடவடிக்கை எடுக்காவிட்டால், கடும் நடவடிக்கை பாயும்&' என தெரிவித்தன.
No comments:
Post a Comment