பள்ளிக் கல்வித்துறைக்கு என தனியாக தொடங்கப்படும் பொதுவான இணையதளத்தில் (www.tnschools.gov.in) தொடக்கப் பள்ளிகள், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் அமைப்பு, அமைவிடம், கட்டட வசதி போன்றவைகள் பதிவு செய்யப்படும். மேலும், அந்தப் பள்ளிகளில் பணியாற்றும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்களின் பெயர், பணி, பணியில் சேர்ந்த நாள், வயது, ஓய்வு பெறும் நாள் போன்ற அனைத்து விவரங்களும் முழுமையாக பதிவு செய்யப்படும். பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களின் எண்ணிக்கை, இடை நிற்றல், தேர்வுகள், தேர்ச்சி போன்றவைகள் பதிவு செய்யப்படும். இதில் பயிலும் மாணவ, மாணவியர் ஒவ்வொருவருக்கும் தர எண் அளிக்கப்பட்டு, ஆண்டு தோறும் அந்த மாணவ மாணவியரின் நிலை கண்காணிக்கப்படும்.
விரைவில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளின் விவரங்கள், உதவி பெறும் பள்ளிகளின் விவரங்கள் மற்றும் சுய நிதி பள்ளிகளின் விவரங்கள் இந்த இணையதளத்தில் பதிவு செய்யப்படும். பள்ளிகள் தொடர்பான விவரங்களை அறிந்து கொள்ள வேண்டும் என்றாலோ அல்லது கணினி வழி காண வேண்டும் என்றாலோ மேலே குறிப்பிடப்பட்டுள்ள இணையதளத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
இணையதளம் வாயிலாக மாணவர்களுக்கு பாடப்பொருள்களை எளிதாகவும் இனிதாகவும் கற்பிக்கும் பொருட்டு கல்விப் பாடப்பொருள் வழங்கும் www.ecs.tnschools.gov.in என்ற புதிய இணையதளம்; பள்ளிக் கல்வித் துறையில் தலைமைச் செயலகம் முதல் மாநில அளவில் உள்ள இயக்ககங்கள் மற்றும் மாவட்ட அளவிலான பள்ளிக் கல்வி அலுவலகங்களுக்கிடையேயான தகவல் பரிமாற்றம் மிகவும் சிறந்த முறையில் கணினி வழியாக நடைபெற உதவும் பொருட்டு துறைகளுக்கிடையே தகவல் பரிமாற்றத்திற்கென www.admin.tnschools.gov.in என்ற புதிய இணையதளம்; ஆகியவற்றை உள்ளடக்கிய கல்வி தகவல் சார்ந்த மேலாண்மை முறைமையினை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா துவக்கி வைத்தார் என்று கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment