முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் 2,300 பேரின் தேர்வுப் பட்டியல் பள்ளிக் கல்வித் துறைக்கு இன்று அனுப்பி வைக்கப்படும் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இதைத் தொடர்ந்து அவர்களுக்கு ஓரிரு நாள்களில் பணி நியமன கலந்தாய்வு நடத்தப்படும் என்று கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. சுமார் 21 ஆயிரத்துக்கும் அதிகமான ஆசிரியர்கள் நியமனத்தில் வெறும் 6 பேர் மட்டுமே உரிய தகுதிகள் பெறவில்லை என்று ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சரிபார்ப்பில் தெரியவந்துள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
ஆசிரியர் தகுதித் தேர்வு, போட்டித் தேர்வு ஆகியவற்றின் மூலம் 18 ஆயிரம் பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்களும், 2,300 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களும் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா தலைமையில் சென்னையில் கடந்த 13-ம் தேதி நடைபெற் பிரமாண்ட விழாவில் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்கள் ஆன்-லைன் கலந்தாய்வில் தங்களுக்கான பணியிடங்களைத் தேர்வு செய்தனர். முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்ட பிறகு பணியிடங்களுக்கான கலந்தாய்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
விழாவுக்குப் பிறகு தேர்வுசெய்யப்பட்டவர்களின் தகுதிகள் மீண்டும் ஒருமுறை சரிபார்க்கப்பட்டன. பலர் உரிய தகுதிகளைப் பெறவில்லை என்று செய்திகள் வந்தன. ஆனால், சரிபார்ப்பின் முடிவில் பட்டதாரி ஆசிரியர்களில் மூன்று பேரும், முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களில் மூன்று பேரும் உரிய தகுதிகளைப் பெறாதது கண்டறியப்பட்டது. இதையடுத்து, ஏற்கெனவே பணி நியமனம் பெற்ற பெரும்பாலானோர் பணியில் சேருவதில் எந்தவிதத் தடையும் இல்லை என்று தெரியவந்துள்ளது.
பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் ஆன்-லைன் மூலமாக பணி நியமன ஆணைகள் வழங்குவதற்கு முன்னதாக அனைவரின் சான்றிதழ்கள், தகுதிகள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களால் சரிபார்க்கப்பட்டன. இதில் ஓரிருவர் உரிய தகுதிகளுடன் இல்லை. அவர்கள் உடனடியாக ஆசிரியர் தேர்வு வாரியத்தை அணுகுமாறு அறிவுறுத்தப்பட்டனர். பல்வேறு காரணங்களால் சுமார் 70 பேர் பணியில் சேரவில்லை.8,556 பேரும் தகுதியானவர்கள்: பணி நியமனம் பெற்ற 8,556 பேரும் உரிய தகுதிகளுடனே பணியில் சேர்ந்துள்ளனர். அதை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் சரிபார்த்துவிட்டனர். இவர்கள் அனைவரும் இந்த மாதத்துக்குரிய சம்பளத்தைப் பெறலாம். அதில் எந்தவிதப் பிரச்னையும் இருக்காது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மிகப்பெரிய எண்ணிக்கையில் தகுதியில்லாதவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதாகக் கூறுவது தவறானது என்றும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
நீதிமன்ற வழக்குகள் காரணமாக சற்றுத் தாமதமாக முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் இறுதித் தேர்வுப் பட்டியல் வெளியிடப்பட்டன. இறுதிநேரத்தில் சற்று அவசரமாக இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டதால் மீண்டும் பட்டியல் சரிபார்க்கப்பட்டது. 2,308 பேரில் மூன்று பேர் மட்டுமே தகுதிகளுடன் இல்லை என்று தெரியவந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். எந்தவொரு மிகப்பெரிய பணி நியமனத்திலும் சிறிய பிரச்னைகள் இருப்பது இயல்புதான். ஆனால், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தகுதியானவர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்று அவர்கள் மேலும் தெரிவித்தனர். நீதிமன்ற உத்தரவுப்படி நிறுத்திவைக்கப்பட்டுள்ள தாவரவியல் பிரிவுக்கான முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வுப் பட்டியல் விரைவில் வெளியாகும். தமிழ் வழி முன்னுரிமை கோருவோர் தவறான சான்றிதழ்களை அளித்துள்ளதால், அந்தப் பிரிவினருக்கு மட்டும் மற்றுமொரு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட வேண்டியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment