பள்ளி மேற்படிப்பு உதவி திட்டத்தின் கீழ், பெற்றோரின் ஆண்டு வருமானம் 1 லட்சத்துக்கு மிகாமல் இருக்கின்ற பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவிகள் உயர்கல்வி பயில சிறப்பு கட்டணம், கல்வி கட்டணம், புத்தக கட்டணம் 1980ம் ஆண்டு நிர்ணயம் செய்யப்பட்டதை வைத்து வழங்கப்பட்டு வருகிறது.
கல்லூரிகளில் அதிகரித்துள்ள கல்வி கட்டணம் மற்றும் சிறப்பு கட்டணம் ஆகியவற்றால் இவர்களுக்கு பாதிப்பு ஏற்படாதிருக்க கட்டணத்தில் முழு சலுகை அளிக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். வருங்காலங்களில், அரசில் உள்ள பல்வேறு துறைகள், தங்கள் துறைகளைச் சார்ந்த படிப்புகளுக்கான கல்வி கட்டணங்களை உயர்த்தும் சமயங்களில் எல்லாம், தனியாக எந்தவிதமான அரசு உத்திரவினையும் எதிர்நோக்காமல், கல்வித் தொகை அறிவிக்கையில் மாற்றம் செய்து,
அரசு துறைகளால் உயர்த்தப்பட்ட கல்விக் கட்டணங்களை உடனடியாக பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மாணவ, மாணவிகளுக்கு பள்ளி மேற்படிப்பு உதவி திட்டத்தின் கீழ் உயர்த்தி வழங்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதனால் அரசுக்கு ரூ.16.54 கோடி கூடுதலாக செலவாகும். இதன் மூலம் 74,181 மாணவ, மாணவியர்கள் பயன் அடைவர்.
பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் நலத்துறைகளின் கட்டுப்பாட்டில் இயங்கும் விடுதிகளிலும், மதுரை, திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் இயங்கி வரும் கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு வழிகாட்டி நூல்கள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதேபோன்று, பெரம்பலூர், சிவகங்கை, திருவண்ணாமலை, விழுப்புரம், தருமபுரி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி மற்றும் கடலூர் ஆகிய மிகவும் பின்தங்கிய 8 மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு பொது தேர்வுகள் எழுதும் மாணவ, மாணவிகள் தேர்வுகளில் அதிக அளவு தேர்ச்சி பெறுவதற்கு வசதியாக அவர்களுக்கும் இலவச சிறப்பு வழிகாட்டிகள் வழங்கவும், இதற்காக ரூ.2.47 கோடி நிதி ஒதுக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதன்மூலம் இம்மாவட்டங்களில் 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில் பயிலும் 2,21,400 மாணவ, மாணவியர்கள் பயன் பெறுவர். இவ்வாறு அரசு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment