கடந்த ஆகஸ்டில், சென்னை, கே.கே.நகரில் உள்ள, ஒரு தனியார் பள்ளி நீச்சல் குளத்தில், மாணவன் ஒருவன் மூழ்கி பலியானான். இந்த சம்பவத்தை தொடர்ந்து, பள்ளிகளில் உள்ள நீச்சல் குளங்களை ஆய்வு செய்ய, அரசு உத்தரவிட்டது.இந்நிலையில், பள்ளி நீச்சல் குளங்கள் பராமரிப்பு தொடர்பாக, தமிழக அரசு, ஒரு புதிய உத்தரவை வெளியிட்டுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
* பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளித்து, நீச்சல் குளங்களை கட்ட வேண்டும். அரசு வகுத்துள்ள விதிமுறைகளை, 100 சதவீதம் கடைபிடிக்க வேண்டும்.
* "டைவிங்' வசதி இருக்கக் கூடாது; அப்படி இருந்தால், உடனே, அத்தகைய வசதியை அப்புறப்படுத்த வேண்டும்.
* நீச்சல் குளத்தின் ஆழம், 5.5 அடிக்குள் இருக்க வேண்டும். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் மத்திய அரசின் விளையாட்டுத்துறை அமைச்சகம் வரையறுத்துள்ள விதிமுறைகளுக்கு உட்பட்டு, நீச்சல் குளத்தை கட்ட வேண்டும்.
* நீச்சல் குளங்கள், நீளம், அகலத்தில், நான்கு விதமாக கட்டுவதற்கு, அனுமதி வழங்கப்படுகின்றன. பள்ளிகளின் அமைவிடம், தேவைக்கு ஏற்ப, குறிப்பிட்ட நீள, அகலத்தில், நீச்சல் குளத்தை கட்ட வேண்டும்.
* அதிகபட்ச ஆழம், 5.5. அடியாக இருந்தாலும், அதிலும், முதலில் குறைவு, நடுத்தரம், அதிகம் என்ற, மூன்று நிலையில் இருக்க வேண்டும். மாணவர்களின் வயதிற்கு ஏற்ப, குறிப்பிட்ட பிரிவு ஆழத்திற்குள் அவர்களை அனுமதிக்க வேண்டும். பாதுகாப்பு சாதனங்கள், லைப்-ஜாக்கெட்டுகள், முதலுதவி வசதி போன்றவை, கண்டிப்பாக இருக்க வேண்டும்.
* மாநகராட்சி, தீயணைப்புத் துறையிடம் இருந்து, சான்றிதழ்களை பெற வேண்டியது, மிகவும் அவசியம். மற்ற பகுதிகளில், அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளிடம் சான்றிதழ் பெற வேண்டும்.இவ்வாறு, உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment