அரசுப் பொதுத் தேர்வு மையங்களில் கடந்த ஆண்டு ஜெனரேட்டர் பயன்படுத்தியதற்கான செலவுத் தொகை வழங்கப்படாத நிலையில், இந்த ஆண்டும் ஜெனரேட்டர் வசதி செய்ய வேண்டும் என அந்தந்த மையங்களுக்கு அரசு தேர்வுத் துறை அறிவுறுத்தியுள்ளது. தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறையால் இந்த ஆண்டு மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள சுமார் 3,500 எஸ்எஸ்எல்சி தேர்வு மையங்கள் மூலம் 11 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதவுள்ளனர். அதேபோல, சுமார் 2,000 பிளஸ் 2 தேர்வு மையங்கள் மூலம் 9 லட்சம் மாணவர்கள் அரசுப் பொதுத் தேர்வை எழுதவுள்ளனர்.
இந்த நிலையில், தமிழகத்தில் நிலவி வரும் மின் பற்றாக்குறை காரணமாக தேர்வு எழுதும் மையங்களில் மாணவர்களுக்கு ஏற்படும் சிரமங்களைத் தடுக்கும் நோக்கில், தேர்வு மையங்களில் ஜெனரேட்டர் வசதி செய்ய வேண்டுமென கடந்த ஆண்டு தேர்வின் போது தமிழக அரசு உத்தரவிட்டது.
இதற்காக ஆகும் செலவை சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு வழங்கும் வகையில், மாவட்ட ஆட்சியரைத் தலைவராகவும், மின் வாரியப் பொறியாளர், பொதுப் பணித் துறை அலுவலர், முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர் ஆகியோரை உறுப்பினர்களாகவும் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த கல்வி ஆண்டில் நடந்த இரு பொதுத் தேர்வுகளிலும் ஜெனரேட்டர் வசதி செய்யப்பட்டதை தமிழக அரசு தீவிரமாகக் கண்காணித்தது.
இந்த நிலையில், தேர்வுகள் முடிந்ததும் ஜெனரேட்டர் வாடகையை உடனடியாகக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தால், சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியர்கள் பலர் தங்களுடைய சொந்த பணத்தையும், சிலர் பெற்றோர்-ஆசிரியர் கழகத்தில் உள்ள நிதியையும் எடுத்து செலவு செய்தனர். எஸ்எஸ்எல்சி தேர்வு மையத்துக்கு சுமார் ரூ. 12 ஆயிரமும், பிளஸ் 2 தேர்வு மையத்துக்கு இருமடங்கும் ஜெனரேட்டருக்கான வாடகையாகச் செலவழிக்கப்பட்டுள்ளது. ஆனால், அடுத்த பொதுத் தேர்வு நடைபெறவுள்ள நிலையில், கடந்த ஆண்டு செலவழித்த தொகையே இதுவரை சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு திரும்பக் கிடைக்கவில்லை.
சென்னையைத் தவிர, பிற மாவட்டங்களில் 2 மணி நேரத்துக்கும் அதிகமாக மின்தடை நீடிக்கும் நிலையில், வரும் மார்ச் 1-ஆம் தேதி தொடங்கி, 27-ம் தேதி வரை பிளஸ் 2 தேர்வு நடைபெறவுள்ளது. இதையடுத்து, ஜெனரேட்டர் வசதி செய்ய வேண்டுமென தேர்வு மையங்கள் அமைந்துள்ள பள்ளிகளுக்கு தேர்வுத் துறை அறிவுறுத்தியுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்வு மையம் அமைந்துள்ள பள்ளிகளில் தேர்வு நேரமான காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மின்தடை ஏற்படும் நேரம் குறித்த தகவல்கள் மாவட்ட கல்வித் துறையால் திரட்டப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து மாவட்ட கல்வித் துறை அதிகாரிகள் கூறியது:
கடந்த ஆண்டு ஜெனரேட்டர் அமைத்தத் தேர்வு மையங்களின் செலவுப்பட்டியல் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன. இதுவரை அதற்கான நிதி ஒதுக்கீடு வரவில்லை. எனினும், மாணவர்களின் நலன் கருதி, மின்தடையை சமாளிக்க இந்த ஆண்டும் ஜெனரேட்டர் வசதி செய்ய வேண்டும் என்பதில் முனைப்புடன் இருக்கிறோம் என்றனர்.
No comments:
Post a Comment