தேர்வுத்துறை அறிவிப்பு பிளஸ் 2 தேர்வை எழுதிய பள்ளி மாணவர்கள், தாங்கள் படித்த பள்ளிகளிலும், தனித்தேர்வு மாணவர்கள், அவர்கள், தேர்வெழுதிய மையங்களிலும், வரும் 27ம் தேதி, மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம். "தத்கால்' திட்டத்தின் கீழ் தேர்வெழுதிய மாணவர்களுக்கு, அவர்களின் வீட்டு முகவரிக்கு, மதிப்பெண் சான்றிதழ் அனுப்பப்படும்.
மறுகூட்டல் திட்டம் : விடைத்தாள் நகல் பெறவோ அல்லது மறுகூட்டல் செய்யவோ விண்ணப்பிக்கலாம். இதற்கு, நாளை, 10ம் தேதி முதல், 13ம் தேதி, மாலை 5:00 மணி வரை, www.dge.tn.nic.in என்ற இணைய தளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். விடைத்தாள் நகல், மறுகூட்டல் ஆகியவற்றுக்கு, தனித்தனியே விண்ணப்பிக்க வேண்டும். விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பிக்கும் மாணவர், அதே பாடத்திற்கு, மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க கூடாது. விடைத்தாள் நகல் பெற்றபின், மறுகூட்டல் செய்யலாம்.
கட்டணம் விவரம் : விடைத்தாள் நகல் பெற, மொழி முதற்தாளுக்கு, 550 ரூபாய், ஆங்கில பாடத்திற்கு, 550 ரூபாய், இதர பாடங்களுக்கு, 275 ரூபாயும், கட்டணமாக செலுத்த வேண்டும். மறுகூட்டல் எனில், மொழித்தாள் மற்றும் உயிரியல் ஆகிய பாடங்களுக்கு, தலா, 305 ரூபாயும், இதர பாடங்களுக்கு, தலா, 205 ரூபாயும் கட்டணமாக செலுத்த வேண்டும். இணையதளத்தில் இருந்து, "டவுண்லோட்' செய்யும் செலான் மூலம், குறிப்பிட்ட கட்டணத்தை, எஸ்.பி.ஐ., வங்கியின் ஏதேனும் ஒரு கிளையில் செலுத்த வேண்டும். கட்டணத்தை, 14ம் தேதிக்குள் செலுத்த வேண்டும்.
மறுமதிப்பீடு திட்டம் : விடைத்தாள் நகல் பெற்றபின், குறிப்பிட்ட பாடத்தை, மறு மதிப்பீடு செய்ய விரும்பினால், மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். மொழி முதற்தாளுக்கு, 1,010 ரூபாய், ஆங்கில பாடத்திற்கு, 1,010 ரூபாய், இதர பாடங்களுக்கு, தலா, 505 ரூபாய் வீதம் கட்டணம் செலுத்த வேண்டும். இவ்வாறு தேர்வுத்துறை அறிவித்து உள்ளது.
விடைத்தாள் நகலை "டவுன்லோடு' செய்யலாம் : விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப் பிக்கும் மாணவ, மாணவியரின், "ஸ்கேன்' செய்யப்பட்ட விடைத்தாள் நகல்கள், இணைய தளத்தில் வெளியிடும் முறை அறிமுகப்படுத்தப்படுகிறது. விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும்போது, "டவுன்லோடு' செய்யும் ஒப்புகை சீட்டினை, மாணவர்கள் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். ஒப்புகை சீட்டில் குறிப்பிட்டுள்ள விண்ணப்ப எண்ணை பயன்படுத்தி, தேர்வர்கள், தங்களது விடைத்தாள் நகலை, இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இந்த முறையில், மறுகூட்டல் முடிவுகளையும் அறியலாம். விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்ய வேண்டிய நாள் மற்றும் இணையதள முகவரி, பின்னர் வெளியிடப்படும். ஜூன், ஜூலையில் நடக்கும் உடனடித் தேர்வுக்கான அட்டவணை, விரைவில் வெளியிடப்படும்.இவ்வாறு தேர்வுத்துறை அறிவித்து உள்ளது.
No comments:
Post a Comment