எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில், மாவட்ட அளவில், அதிக மதிப்பெண்கள் பெறும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவ, மாணவியருக்கு வழங்கப்படும் உதவித்தொகை, அதிகரிக்கப்பட்டுள்ளது. உயர்த்தப்பட்ட உதவித் தொகை, இக்கல்வியாண்டு முதல் நடைமுறைக்கு வருகிறது.
அரசுப் பள்ளிகளில் பயின்று, எஸ்.எஸ்.எல்.சி., பொதுத் தேர்வில், மாவட்ட அளவில், அதிக மதிப்பெண் பெறும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், கிறிஸ்துவத்துக்கு மதம் மாறிய ஆதிதிராவிடர் ஆகிய மூன்று பிரிவுகளில், மாணவ மாணவியருக்கு, முதல் பரிசாக, 2,000 ரூபாயும், இரண்டாம் பரிசாக, 1,000 ரூபாயும், மூன்றாம் பரிசாக, 500 ரூபாயும் வழங்கப்பட்டு வந்தது.அதே போல், பிளஸ் 2 வகுப்பில், மாவட்ட அளவில், அதிக மதிப்பெண்கள் பெறும் ஒரு மாணவர் மற்றும் ஒரு மாணவிக்கு, பரிசுத் தொகையாக, 6,000 ரூபாய் வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், 2013 -14 ஆண்டிலிருந்து, மேற்கண்ட மூன்று பிரிவுகளிலும், எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில், மாவட்ட அளவில், அதிக மதிப்பெண்கள் பெறும்,
மாணவ, மாணவியருக்கு, முதல் பரிசு, 3,000 ரூபாயாகவும், இரண்டாம் பரிசு, 2,000 ரூபாயாகவும், மூன்றாம் பரிசு, 1,000 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
அதே போல், பிளஸ் 2 வகுப்புகளில், மாவட்ட அளவில், அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவ, மாணவியருக்கு, முதல் பரிசு, 6,000 ரூபாயாகவும்,
இரண்டாம் பரிசு, 4,000 ரூபாயாகவும், மூன்றாம் பரிசு, 2,000 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. உயர்த்தப்பட்ட உதவித் தொகை, இக்கல்வியாண்டு முதல், நடைமுறைக்கு வரும் என, தெரிகிறது.
இது குறித்து, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அதிகாரிகள் கூறுகையில், "ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களிடையே, கல்வித் திறனை அதிகரிக்கவும், போட்டிகளை ஊக்குவிக்கவும், அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகை, அதிகரிக்கப்பட்டுள்ளது' என்றனர்.
No comments:
Post a Comment