கல்வி சார்ந்த தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!
Friday, May 10, 2013
பள்ளி மானியக் கோரிக்கை - அறிவிப்பு முழு விவரம்
மானியக்கோரிக்கை விவாதம்
சட்டசபையில் கேள்வி நேரம் முடிந்தம், பள்ளிக்கல்வி, விளையாட்டுகள், இளைஞர்நலம் மற்றும் தமிழ்வளர்ச்சித்துறை மானியக்கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது.இதைத்தொடர்ந்து, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வைகைச்செல்வன் பதில் அளித்து புதிய அறிவிப்புகளை வெளியிட்டு பேசியதாவது..
மாற்றுத்திறன்கொண்ட குழந்தைகளுக்கு
மாற்றுத்திறன்கொண்ட குழந்தைகளும் தரமான கல்வி பெறும் வகையில், பள்ளிகளில் பயிலும் பார்வையற்ற குழந்தைகளுக்கு கற்பித்தல் முறையை எளிதாக்க சிறப்பு கல்வி உபகரணங்கள் அடங்கிய பையினை வழங்கப்படும்.இதன் மூலம் 2221 மாணவர்கள் பயன்அடைவார்கள். இதற்கான திட்டச்செலவு 18 லட்சத்து 52 ஆயிரம் ரூபாய்.அரசு தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிக்கூடங்கள் மற்றும் மேல்நிலைப்பள்ளிக்கூடங்களில் ஆங்கிலவழிப் பிரிவுகள் தொடங்கப்படும். இதனால் ஆண்டுக்கு சுமார் 1½ லட்சம் மாணவர்கள் பயன்பெறுவார்கள்.
3711 ஆசிரியர்கள் நியமனம்
மாணவ–மாணவிகளுக்கு தரமான கல்வி வழங்கும் வகையில், 2011–12 மற்றும் 2012–13–ம் ஆண்டுகளில் மொத்தம் 63,125 ஆசிரியர் பணியிடங்களுக்கு முதல்–அமைச்சர் ஜெயலலிதா ஒப்பளிப்பு செய்துள்ளார்.இதன் தொடர்ச்சியாகவும், தொடக்கக்கல்வி, இடைநிலைக்கல்வி, மேல்நிலைக்கல்வி ஆகியவை சிறப்புடன் அமையவும், மாணவர்கள் தரமான கல்வியைப்பெறவும், இந்த ஆண்டு 3711 ஆசிரியர்கள் பணியிடங்கள் நிரப்பப்படும்.
ஆசிரியர் பணியிட விவரம் வருமாறு:–
நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் 314, தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் 380, முதுகலை ஆசிரியர்கள் 880, பட்டதாரி ஆசிரியர்கள் 1094, இடைநிலை ஆசிரியர்கள் 887, சிறப்பு ஆசிரியர்கள் 156 ஆக மொத்தம் 3711 ஆசிரியர்கள் ஆவார்கள்.
உதவியாளர்கள்
ஆசிரியர் சார்ந்த காலிபணியிடங்களை நிரப்பும் வகையில், உதவி தொடக்க கல்வி அதிகாரிகள் 16, அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர்கள் 2, அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள் 99, மாவட்ட கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன உடற்கல்வி இயக்குநர்கள் பணியிடங்கள் 8 என மொத்தம் 125 ஆசிரியர் சார்ந்த காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்.கல்வித்துறையில், ஆசிரியரல்லாத பணியிடங்கள் நிரப்புவது அவசியமாகிறது. எனவே, 850 உதவியாளர்கள் உள்பட மொத்தம் 1146 காலிப்பணியிடங்களும் நிரப்பப்படும்.
ஆல்சு சாலை ‘தமிழ்ச்சாலை’ என பெயர் மாற்றம்
சென்னையில் தமிழ்வளர்ச்சி, கலைபண்பாட்டுத்துறை, தொல்லியல் துறை ஆகிய அலுவலகங்கள் அடங்கிய தமிழ் வளர்ச்சி வளாகம் அமைந்துள்ள ஆல்சு சாலைக்கு முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் ஆணையின்படி, ‘‘தமிழ்சாலை’’ என பெயர் சூட்டப்படும்.மேலும், சென்னையில் உள்ள கொலைகாரன்பேட்டை பெயர் மாற்றம் செய்யப்படும்.
ஆக்கி விளையாட்டு மைதானம்
சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டு அரங்கில், வருங்காலங்களில் நடைபெறவுள்ள பன்னாட்டு மற்றும் தேசிய அளவிலான போட்டிகளைக் கருத்தில் கொண்டு, தற்போதுள்ள செயற்கை இழை வளைகோல்பந்து (ஆக்கி) ஆடுகளம் ரூ.3½ கோடியில் சீரமைக்கப்படும்.மாவட்ட விளையாட்டு வளாகங்களில் உடற்பயிற்சிக்கூட (ஜிம்) வசதிகளை மேம்படுத்தும் வகையில், முதல் கட்டமாக 10 மாவட்டங்களில் 4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உடற்பயிற்சி கூடம் அமைக்கப்படும்.இவ்வாறு அமைச்சர் வைகைச்செல்வன் பேசினார்.இதைத்தொடர்ந்து உறுப்பினர்களின் குரல் ஓட்டுமூலம் மானியக்கோரிக்கை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.முன்னதாக உறுப்பினர்கள் கங்கவல்லி ஆர்.சுபா (தே.மு.தி.க.), பாலக்கோடு கே.பி.அன்பழகன் (அ.தி.முக.), திண்டுக்கல் கே.பாலபாரதி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு), மணப்பாறை ஆர்.சந்திரசேகர் (அ.தி.மு.க.), சிவகங்கை சு.குணசேகரன் (இந்திய கம்யூனிஸ்டு), கிள்ளியூர் எஸ்.ஜான்ஜேக்கப் (காங்கிரஸ்), நாங்குனேரி ஏ.நாராயணன் (அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி), ஆம்பூர் ஏ.அஸ்லம் பாட்சா (மனிதநேய மக்கள் கட்சி), ஓட்டப்பிடாரம் டாக்டர் கே.கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்), உசிலம்பட்டி பி.வி.கதிரவன் (அகில இந்திய பார்வர்டு பிளாக்), நான்சி ஆன் சிந்தியா பிரான்சிஸ் (ஆங்கிலோ இந்தியன்–நியமன உறுப்பினர்) ஆகியோர் பேசினார்கள்.
No comments:
Post a Comment