மாநிலம் முழுவதும், 2,500 அரசு மேல்நிலைப் பள்ளிகளில், நாளை (17ம் தேதி) முதல், டி.இ.டி., விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. விண்ணப்பம் விற்பனை மையமாக, பள்ளிகளை பயன்படுத்துவதை, உடனே நிறுத்த வேண்டும் என்றும், இதனால், கல்விப்பணி கடுமையாக பாதிக்கும் என்றும், தலைமை ஆசிரியர்கள், எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மூன்றாவது டி.இ.டி., தேர்வை, வரும் ஆகஸ்ட், 17, 18ம் தேதிகளில், டி.ஆர்.பி., நடத்துகிறது. அரசு பள்ளிகளில், இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியில் சேர வேண்டும் என்றாலும், தனியார் பள்ளிகளில், இந்த வேலையில் சேர வேண்டும் என்றாலும், டி.இ.டி., தேர்வில், தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இதனால், அரசுப் பணியை மட்டுமில்லாமல், தனியார் பள்ளிகளில், பணியை எதிர்பார்ப்பவர்களும், டி.இ.டி., தேர்வை எழுதுவர். அத்துடன், ஏற்கனவே பணியில் சேர்ந்த ஆசிரியர்கள், ஐந்து ஆண்டுகளுக்குள், டி.இ.டி., தேர்வில், தேர்ச்சி பெற வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது.
எனவே, ஆசிரியர் பணியில் உள்ளவர்களும், இந்த தேர்வை எழுதுவர். மூன்று தரப்பினரும், இந்த தேர்வுக்கு விண்ணப்பிப்பர் என்பதால், 7 லட்சம் பேர் வரை, விண்ணப்பிக்கலாம் என, டி.ஆர்.பி., எதிர்பார்க்கிறது. ஏற்கனவே நடந்த இரு தேர்வுகளை, 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் எழுதினர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், 14 லட்சம் விண்ணப்பங்களை, டி.ஆர்.பி., அச்சிட்டு, வினியோக மையங்களுக்கு அனுப்பியுள்ளது.
நாளை, 17ம் தேதி முதல், ஜூலை, 1ம் தேதி வரை, மாநிலம் முழுவதும் உள்ள, 2,500 அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும், டி.இ.டி., விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளன. பள்ளிகளின் அமைவிடத்திற்கு தகுந்தாற் போல், விண்ணப்பங்கள், பகிர்ந்து அனுப்பப்பட்டுள்ளன.
கடந்த முறை, மாவட்ட கல்வி அலுவலகங்களில், விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்பட்டபோது, தர்மபுரி உள்ளிட்ட சில மாவட்டங்களில், அடிதடி நடந்தது. கூட்டம், அளவுக்கு அதிகமாக கூடியதால், போலீசார், தடியடி நடத்தினர். இந்த முறை, 2,500 பள்ளிகளில், விண்ணப்பம் வழங்குவதால், கடந்த முறை நடந்த பிரச்னை, இப்போது ஏற்படாது என, டி.ஆர்.பி., கருதுகிறது.
ஆனால், பள்ளிகளில், விண்ணப்பம் விற்பனை செய்வதற்கு, தலைமை ஆசிரியர்கள் மத்தியில், கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. "பள்ளியில், விண்ணப்பங்களை விற்பனை செய்தால், தேவையில்லாமல், கூட்டம் கூடும்; இதனால், பல்வேறு தொந்தரவுகள் ஏற்படும்; மொத்தத்தில், கல்விப்பணி பாதிக்கும்" என தலைமை ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
தமிழ்நாடு அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலர் சாமி சத்தியமூர்த்தி கூறியதாவது: பள்ளி வளாகத்தை, விண்ணப்பம் விற்பனை மையமாக மாற்றுவது தவறு. நகரங்களில் உள்ள பள்ளிகளில், கூட்டம், அளவுக்கு அதிகமாக வரும். பல, "கவுன்டர்களை" திறந்து, அதற்கென, சில பணியாளர்களையோ, பணியாளர்கள் இல்லாவிட்டால், ஆசிரியர்களையோ நியமித்து, விண்ணப்பங்களை வழங்க வேண்டும்.
விண்ணப்பம் வழங்கும் பணியில், ஆசிரியர் ஈடுபட்டால், அவர், வகுப்பிற்கு, பாடம் எடுக்க செல்ல மாட்டார். இதனால், கல்விப்பணி, கண்டிப்பாக பாதிக்கும். பள்ளிகளில், விண்ணப்பம் வினியோகிக்கின்ற முறையை ரத்து செய்ய வேண்டும். எதுவாக இருந்தாலும், டி.இ.ஓ., அலுவலகங்களிலோ அல்லது சி.இ.ஓ., அலுவலகங்களிலோ வழங்கலாம். அல்லது, தபால் அலுவலகங்கள் மூலமாக கூட, விண்ணப்பங்களை வழங்கலாம். இவ்வாறு, சாமி சத்தியமூர்த்தி கூறினார்.
ஏற்கனவே, வெயில் காரணமாக, பள்ளிகள், ஒரு வாரம் கால தாமதமாக திறக்கப்பட்டன. இந்நிலையில், இரண்டு வாரம், விண்ணப்பம் வழங்கும் பணி நடந்தால், மாணவர்கள், மேலும் பாதிக்கப்படுவர்.
No comments:
Post a Comment