தனியார் பள்ளிகள், இட பிரச்னை குறித்து ஆய்வு செய்து வரும் நிபுணர் குழு, இம்மாத இறுதிக்குள், தமிழக அரசிடம், அறிக்கையை சமர்ப்பிக்க திட்டமிட்டுள்ளது.
மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்ககத்தின் கீழ் இயங்கி வரும் பள்ளிகளில், 1,500க்கும் மேற்பட்ட பள்ளிகள், இட பிரச்னை காரணமாக, அங்கீகாரம் புதுப்பித்தல் உத்தரவு பெறுவதில் சிக்கலை சந்தித்து வருகின்றன. இந்த விவகாரம் குறித்து, பொதுமக்கள், ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகிகள் என, அனைத்து தரப்பினரிடம் இருந்தும் கருத்துக்களை கேட்டு, தமிழக அரசிடம் அறிக்கையை சமர்ப்பிக்க, பள்ளிக் கல்வி இயக்குனர் தேவராஜன் தலைமையில், குழு அமைக்கப்பட்டது.
இக்குழு, பொது மக்களிடம், சமீபத்தில், கருத்துக்களை கேட்டறிந்தது. அனைத்து தரப்பினரும் தெரிவித்த கருத்துக்களை, தற்போது, நிபுணர் குழு, ஆய்வு செய்து வருகிறது. இந்தப் பணி முடிந்ததும், அறிக்கை தயாரிப்பு பணி நடக்கும் என்றும், இம்மாத இறுதிக்குள், தமிழக அரசிடம், அறிக்கையை சமர்ப்பிப்பதற்கும், குழு திட்டமிட்டுள்ளது. இதற்கிடையே, மாநிலம் முழுவதும், 900த்திற்கும் மேற்பட்ட நர்சரி, பிரைமரி பள்ளிகளை மூடுவதற்கு, அந்தந்த மாவட்ட கலெக்டர்களே உத்தரவிட்டுள்ளனர். எனினும், அதிக மாணவர்களை கொண்டுள்ள மெட்ரிகுலேஷன் பள்ளிகள், அதிகளவில் மூடப்படவில்லை. தேவராஜன் குழு அறிக்கையை சமர்பித்ததும், தமிழக அரசு, அறிவிப்பை வெளியிடும் என, எதிர்பார்க்கப்படுகிறது. நிலத்தின் மதிப்பு பல மடங்கு உயர்ந்துவிட்டதால், பள்ளியை ஒட்டி, இடங்களை வாங்க முடியாத நிலையை, பள்ளி நிர்வாகிகள், நிபுணர் குழுவிடம், எடுத்துக் கூறி உள்ளனர். எனவே, பள்ளிகளின் இட பரப்பளவிற்கு ஏற்ப, மாணவ, மாணவியர் எண்ணிக்கையை இறுதி செய்து, பிரச்னையை தீர்க்கலாம் எனவும், பள்ளி நிர்வாகிகள் கருத்து தெரிவித்துள்ளனர். எனவே, இந்த அடிப்படையிலேயே, அரசின் அறிவிப்பு அமையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment