பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், தேர்ச்சி சதவீதம் குறைந்த அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களை, மாவட்ட வாரியாக அழைத்து, கல்வித்துறை அதிகாரிகள், "ரெய்டு' நடத்தி வருகின்றனர். கல்வித்துறை முதன்மை செயலர் சபிதா மற்றும் இயக்குனர்கள் குழு, மாவட்டங்களுக்குச் சென்று நடத்தி வரும், கிடுக்கிப்பிடி விசாரணையால், தலைமை ஆசிரியர்கள் பதற்றத்தில் உள்ளனர்.
பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வுகளில், மாநில அளவில், அரசுப் பள்ளி மாணவர்கள் ஜொலிக்கவில்லை. குறிப்பாக, பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள், தனியார் பள்ளி மாணவர்களுக்கு சாதகமாக அமைந்தன. இந்நிலையில், பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வுகளில், மாவட்டந்தோறும், தேர்ச்சி சதவீதம், மிக குறைவாக உள்ள, 10 அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களை வரவழைத்து, கல்வித்துறை அதிகாரிகள், "ரெய்டு' நடத்தி வருகின்றனர்.
விசாரணை குழு:
பள்ளி கல்வித் துறை முதன்மை செயலர் சபிதா, பள்ளிக் கல்வி இயக்குனர் தேவராஜன், தொடக்க கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் மற்றும் பல்வேறு அதிகாரிகள் அடங்கிய குழு, இந்த விசாரணையை நடத்தி வருகிறது. நேற்று முன் தினம், வேலூரில் நடந்த கூட்டத்தில், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தலைமை ஆசிரியர்கள், கலந்து கொண்டனர். நேற்று, கிருஷ்ணகிரி மாவட்டம், ஓ‹ரில் நடந்த கூட்டத்தில், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட, சுற்றுப்புற மாவட்டங்களைச் சேர்ந்த தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட வாரியாக, தேர்ச்சி சதவீதம் குறைந்த, 10 அரசு பள்ளிகள், 40 சதவீதம் முதல், 60 சதவீதம் வரை, தேர்ச்சி பெற்றுள்ளன. இதில், 60 சதவீதத்திற்கும் குறைவாக தேர்ச்சி சதவீதம் பெற்ற பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு, அதிகம், "டோஸ்' விழுவதாக, துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதிகாரிகளின் உத்தரவு:
"அனைத்து ஆசிரியர்களும், தினமும் பள்ளிப் பணிக்கு வர வேண்டும். ஆசிரியர்கள், அடிக்கடி விடுமுறை எடுக்க,
தலைமை ஆசிரியர்கள் அனுமதிக்கக் கூடாது. ஆசிரியர்களுக்கு முன்னுதாரணமாக, தலைமை ஆசிரியர்கள் விளங்க வேண்டும். சராசரி மாணவர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு, சிறப்பு வகுப்புகளை நடத்த, ஏற்பாடு செய்ய வேண்டும். "உள்ளூர் பகுதிகளில் உள்ள ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் உதவியுடன், மாணவர்களுக்கு, சிறப்பு வகுப்புகள் எடுக்க வேண்டும்' என்பது உட்பட பல்வேறு கருத்துக்களை, அதிகாரிகள் குழு வலியுறுத்தியது. மாவட்ட வாரியான கூட்டங்களில், செயலரே பங்கேற்பதால், தலைமை ஆசிரியர்கள், அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த கூட்டங்கள், இதர மாவட்டங்களில், தொடர்ந்து நடக்க உள்ளது.
"நாங்கள் மட்டும் காரணம் கிடையாது':
தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்க பொதுச் செயலர் சாமி சத்தியமூர்த்தி கூறியதாவது:
* தலைமை ஆசிரியர்கள், கல்விப் பணியை சரிவர செய்ய முடியவில்லை. நலத்திட்ட பொருட்களை ஏற்றி வருவது, மாணவர்களுக்கு வினியோகிப்பது, தேர்தல் வேலைகள், மக்கள் தொகை கணக்கெடுப்பு வேலைகள் உள்ளிட்ட, பல்வேறு பணிகளை செய்ய வேண்டி உள்ளது.
* தனியார் பள்ளிகளில், 10ம் வகுப்பு பாடத்தை, 9ம் வகுப்பில் இருந்தும், பிளஸ் 2 பாடத்தை, பிளஸ் 1ல் இருந்தும் நடத்துகின்றனர். இது, அதிகாரிகளுக்கும் நன்றாக தெரியும். எனினும்,
Advertisement தனியார் பள்ளிகள் மீது, நடவடிக்கை எடுப்பதில்லை. அரசு பள்ளிகளில், அந்தந்த ஆண்டுக்குரிய பாடங்கள் மட்டுமே நடத்தப்படுகின்றன. அரசு பள்ளிகளை விட, தனியார் பள்ளிகள் தேர்ச்சி அதிகம் பெறுவதற்கு, இது ஒரு முக்கிய காரணம்.
* சரியாக படிக்காத மாணவர்களை, 9ம் வகுப்பிலும், பிளஸ் 1லும், கட்டாய, டி.சி., கொடுத்து, தனியார் பள்ளிகள் வெளியேற்றுகின்றன. அவர்கள், நேராக, அரசு பள்ளிகளுக்குத் தான் வருகின்றனர்.
* தனியார் பள்ளிகளில், 9ம் வகுப்பிலும், பிளஸ் 1 வகுப்பிலும், டி.சி., கொடுக்கப்பட்ட மாணவர்கள் எண்ணிக்கையை ஆய்வு செய்தால், எல்லாம் வெளிச்சத்திற்கு வரும். இந்த பிரச்னைகளை எல்லாம் அறியாமல், அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் மட்டும் காரணம் என, கூறுவது சரியல்ல. இவ்வாறு சாமி சத்தியமூர்த்தி கூறினார்.
No comments:
Post a Comment