பேருந் தில் பயணம் செய்யும் பள்ளி குழந்தைகளுக்கு இலவச பாஸ் வழங்கும் வரை டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படும் என்று அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
கோடை விடுமுறைக்கு பின்னர் பள்ளிகள் இன்று திறக்கப்படுகிறது.
பேருந்தில் பயணம் செய்யும் பள்ளி குழந்தைகளுக்கு அரசு போக்குவரத்து கழகத்தில் இலவச பஸ் பாஸ் வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது. வசிப்பிடத்திற்கும், பள்ளிக்கும் இடையே 30 கிலோ மீட்டர் தூரத்திற்கு உட்பட பகுதிகளில் வசிக்கும் மாணவ, மாணவிகள் இந்த இலவச பஸ்பாஸ் அட்டையை பெற்றுக் கொள்ளலாம். இந்த பஸ்பாஸ் மூலம் மாணவ, மாணவிகள் ஒருநாளைக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் பள்ளிக்கும், வீட்டுக்கும் சென்று வரலாம். நடப்பு கல்வியாண்டுக்கு இலவச பாஸ் வழங்குவதற்கான நடவடிக்கைகளை பள்ளி கல்வித்துறை மூலம் இணைந்து வழங்க போக்குவரத்து கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இன்று பள்ளிகள் திறக்கப்படுவதால் பேருந்துகளில் இலவசமாக செல்ல அனுமதிக்கப்படுவார்களா அல்லது கட்டணம் வசூலிக்கப்படுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. கடந்தாண்டு இலவச பாஸ் வழங்குவதற்கு தாமதம் ஏற்பட்டது. அப்போது பல்வேறு இடங்களில் மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். இதனால் சீருடை அணிந்து வரும் குழந்தைகளை ஏற்றி செல்ல போக்குவரத்து கழக பேருந்துகளுக்கு உத்தரவிடப்பட்டது.
பள்ளிகள் இன்று திறக்கப்படுகிறது. இலவச பாஸ் திட்டத்திற்கு பயனடையும் மாணவர் பட்டியலை தயாரிப்பதற்கு மேலும் ஒரு மாதம் வரை தாமதம் ஏற்படும் என போக்குவரத்து கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மாணவர்கள் பயணம் செய்வதற்கு அனுமதிக்கப்படுவது தொடர்பாக கோவை போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் கேட்டபோது கூறியதாவது:
சீருடை அணிந்த மாணவர்களை ஏற்றி செல்ல அனுமதிப்பது குறித்து முறைப்படி எங்களுக்கு இதுவரை எந்த உத்தரவும் வரவில்லை. பள்ளி மாணவர்களுக்கு விரைவாக பாஸ் வழங்குவதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே துவக்கி விட்டோம். பள்ளிகளில் இருந்து மாவட்ட கல்வித்துறை மூலம் விண்ணப்பங்கள் அனுப்பவேண்டும். இப்பட்டியல் எவ்வளவு விரைவாக வருகிறதோ அதற்கேற்ப நாங்களும் பாஸ் வழங்கி விடுவோம். கோவை மண்டலத்தில் இப்பணிகள் முடிய ஒரு மாதம் வரை ஏற்படலாம். பஸ் பாஸ் வழங்கும் வரை பயணம் செய்யும் மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படும். பாஸ் இல்லாமல் அனுமதிக்கலாம் என அரசு உத்தரவு வந்தால் அதை செயல்படுத்துவோம்,” என்றனர். எனவே இன்று பள்ளி செல்லும் குழந்தைகள் கட்டாயம் டிக்கெட் வாங்கவேண்டியிருக்கும்.
கடந்தாண்டு கோவை, நீலகிரி, திருப்பூர் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய கோவை கோட்ட போக்குவரத்து கழகத்தில் மொத்தம் 1,350 பள்ளிகளை சேர்ந்த 2.50 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு இலவச பஸ்பாஸ் அட்டை வழங்கப்பட்டது. இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
No comments:
Post a Comment