பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வெழுதும் மாணவ, மாணவியரின் பலர், படிப்பிற்குப் பின், மதிப்பெண் சான்றிதழில் இடம் பெற்றுள்ள விவரங்களில், பிழை இருப்பதாகக் கூறி, திரும்ப, திரும்ப தேர்வுத்துறைக்கு படை எடுக்கின்றனர். இந்த பிரச்னையை,
முற்றிலும் தடுக்கும் வகையில், மாணவர்களின் புகைப்படத்துடன், 11 வகையான விவரங்கள் மற்றும் மாணவர், பெற்றோர், வகுப்பு ஆசிரியர், தலைமை ஆசிரியர் ஆகிய, நான்கு பேரிடமும் கையெழுத்து பெற, தேர்வுத்துறை, ஏற்பாடு செய்துள்ளது.
பொதுத்தேர்வை எழுதியதற்குப் பிறகோ அல்லது சில ஆண்டுகள் கழித்தோ, "மதிப்பெண் சான்றிதழில் உள்ள விவரங்களில், பல பிழைகள் உள்ளன, அதை சரிசெய்து தாருங்கள்' என, கேட்டு, ஏராளமானோர், தேர்வுத்துறையிடம் விண்ணப்பிக்கின்றனர். இது, தேர்வுத்துறைக்கு, பெரும் தலைவலியாக இருந்து வருகிறது.
இந்த பிரச்னையை, நிரந்தரமாக தீர்க்கும் வகையில், இயக்குனர் தேவராஜன், அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். 11 வகையான விவரங்கள் அடங்கிய படிவத்தை, மாணவர்களிடம் வழங்கி, அதில், மாணவர்களின் புகைப்படத்துடன், மாணவர், வகுப்பு ஆசிரியர், பெற்றோர் மற்றும் தலைமை ஆசிரியர் என, நான்கு பேரிடமும், உறுதிமொழி கையெழுத்தை பெற, ஏற்பாடு செய்துள்ளது.
இது குறித்து, இயக்குனர் வெளியிட்ட அறிவிப்பு: வரும் மார்ச், ஏப்ரலில் பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்கள் குறித்த விவரங்கள், வரும், 26ம் தேதி முதல் சேகரிக்கப்பட உள்ளன. இந்த விவரங்களின் அடிப்படையில் தான், மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும். ஒருசில பெற்றோர், குழந்தைகளை, பள்ளியில் சேர்க்கும்போது, பெயர், "இனிஷியல்' பிறந்த தேதி போன்ற விவரங்களை, தவறாக வழங்கி விடுகின்றனர். இதனால், மதிப்பெண் சான்றிதழிலும், தவறான விவரங்கள் பதிவாகி விடுகின்றன. இதனால், மாணவர்கள், உயர்கல்விக்குச் செல்லும்போதும், வெளிநாடுகளுக்கு செல்லும்போதும், பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகின்றன. இந்த பிரச்னைகளை சரி செய்ய, அதிக கால தாமதமும் ஏற்படுகிறது. இதை தவிர்க்க, தற்போது, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பயிலும் அனைத்து மாணவ, மாணவியரிடமும், உறுதிமொழிச் சான்றிதழ் படிவம் வழங்கப்படும். இதில், பெயர், இனிஷியல், பிறந்த தேதி, மாணவர் எந்த வகுப்பை சேர்ந்தவர் (ஜாதி) என்பது உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் சரிபார்த்துக்கொண்டு, அதை, பதிவு செய்ய வேண்டும்.
இந்த படிவங்களை, நாளை 26ம் தேதி முதல், செப்டம்பர், 7ம் தேதிக்குள், மாலை, 4:00 மணி முதல், 5:00 மணி வரை, பள்ளி தலைமை ஆசிரியர்களிடம், சமர்ப்பிக்க வேண்டும். பெற்றோர், பிள்ளைகளின் பிறப்புச் சான்றிதழ் மற்றும் ஜாதி சான்றிதழ்களை பெற்று வைத்துக்கொள்ள வேண்டும். சான்றிதழ்களை பெற இயலாத பெற்றோர், அவர்கள் அளிக்கும் உறுதிமொழி ஆவணத்தின் அடிப்படையில், விவரங்கள் அனைத்தும் பதியப்படும். இவ்வாறு இயக்குனர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment