அரசு பள்ளிகளில் கடந்த 1990,91, 1991,92ம் ஆண்டுகளில் தொகுப்பூதியத்தில் இடைநிலை, பட்டதாரி, முதுகலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.800, பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ.1,200, முதுகலை ஆசிரியர்களுக்கு ரூ.1,400 தொகுப்பூதியமாக வழங்கப்பட்டது. இந்நிலையில் தொகுப்பூதிய ஆசிரியர்கள் தொடுத்த வழக்கில் ஆசிரியர்கள் நியமன நாள் முதல் காலமுறை ஊதியம் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
உயர்நீதிமன்ற உத்தரவு அடிப்படையில் 1990,91, 1991,92ம் ஆண்டுகளில் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்ட முதுகலை ஆசிரியர்களுக்கு மட்டும் பணி நியமன நாள் முதல் பணிவரன்முறை செய்து காலமுறை ஊதியம் வழங்கப்பட்டது.
இதுகுறித்து உரிய தெளிவுரை கேட்டு பள்ளிக் கல்வி இயக்குனர் அரசுக்கு கடிதம் அனுப்பியிருந்தார். இதுதொடர்பாக பள்ளி கல்வி செயலர் சபிதாவின் விளக்கக் கடிதம்: ஏற்கனவே 2012 ஜூன்26ம் தேதி அரசு கடிதத்தில் 1990,91, 1991,92ம் ஆண்டுகளில் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்ட முதுகலை ஆசிரியர்களுக்கு பணி விதிகள் ஏதும் தளர்வு செய்ய கூடாது. இந்த நிபந்தனை அடிப்படையில் பணி நியமன நாள் முதல் முன்தேதியிட்டு பணிவரன்முறை செய்து காலமுறை ஊதியம் வழங்கலாம் எனவும், பணிவரன்முறை செய்த நாளில் இருந்து பணிமூப்பு நிர்ணயிக்க இயலாது எனவும் தெரிவிக்கப்பட்டது.
மேலும் தமிழ்நாடு மாநில மற்றும் சார்நிலைப் பணி விதிகளில் பொதுவிதி 35(ஏ) பின்பற்றி பணிமூப்பு நிர்ணயம் செய்யலாம் என்றும், பணி மாறுதல் மூலம் நியமிக்கப்பட்டவர்களுக்கு விதி 35(ஏஏ)யை பின்பற்றி பணிமூப்பு நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு 1990,91, 1991,92ல் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்ட அனைத்து ஆசிரியர்களுக்கும் சமமாக பொருந்தும். எனவே பட்டதாரி ஆசிரியர்களுக்கு என தனியாக தெளிவுரை வழங்க அவசியம் இல்லை. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment