அரசு உதவி பெறும் கல்லூரிகளில் காலியாக உள்ள, உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப, அரசு அறிவித்து ஓராண்டாகியும், இதுவரை, 25 சதவீதப் பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டு உள்ளன.தமிழகத்தில், 133 அரசு உதவி பெறும் கல்லூரிகளில், லட்சக்கணக்கான மாணவர்கள் பயில்கின்றனர். 2007ல் இருந்து, இக்கல்லூரிகளில், உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை.
இந்நிலையில், "2006 - 12ம் ஆண்டு வரை, அரசு உதவி பெறும் கல்லூரிகளில் காலியாக உள்ள, 3,120 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும்' என, தமிழக அரசு அறிவித்து, 2012, மே மாதம், அரசாணை வெளியிட்டது. பல்கலைக்கழக மானியக் குழு விதிமுறைகளின் படி, பிஎச்.டி., பட்டம் பெற்றவர் அல்லது எம்.பில்., பட்டத்துடன், "நெட், ஸ்லெட்' தேர்ச்சி பெற்றவர்கள், தகுதியுடையவர்கள் என, அறிவிக்கப்பட்டது. முன்பு உதவிப் பேராசிரியர் பணியிடங்களை, அந்தந்தக் கல்லூரி நிர்வாகங்களே நிரப்பி வைந்த நிலையில், தற்போது உதவிப் பேராசிரியர் நியமனத்திற்குப் புதிய முறையை அரசு அறிமுகப்படுத்தியது. அதில், கல்லூரிகளில் காலியாக உள்ள, உதவிப் பேராசிரியர் காலி பணியிடங்கள் நிலை குறித்து அறிய, கல்லூரி கல்வி இணை இயக்குனர் மற்றும், இரண்டு அரசு கல்லூரி முதல்வர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இக்குழு, கல்லூரியில் உள்ள உண்மை நிலையைக் கண்டறியும். பின், உதவிப் பேராசிரியர் தேர்வை ஆய்வு நடத்தி, அரசுக்கு அறிக்கை அளிக்கும். ஆனால், இக்குழு அமைக்கப்பட்டு, ஓராண்டாகியும் இதுவரை பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. மொத்தமுள்ள, 3,120 உதவிப் பேராசிரியர் பணியிடங்களில், 22 கல்லூரிகளில் உள்ள, 500க்கும் குறைவான பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டு உள்ளன. தற்போது நிலவரப்படி, அரசு உதவி பெறும் கல்லூரிகளில், 30 சதவீதப் பணியிடங்கள் காலியாக உள்ளன. ஆசிரியர் பற்றாக்குறையால், பெரும்பாலான கல்லூரிகளில் வகுப்புகள் நடைபெறுவது இல்லை.
No comments:
Post a Comment