கல்வித்துறை இணை இயக்குனர்கள் பல மாவட்டங்களில் முகாமிட்டு, தேர்வுப் பணிகளை கண்காணித்து வருகின்றனர்.
மதுரை உட்பட 5 மாவட்டங்களில், இணை இயக்குனர் உமா தலைமையில் தேர்வுப் பணிகள் நடக்கின்றன. 44 மையங்களில், 26 ஆயிரம் பேர் எழுதுகின்றனர். தேர்வு மையங்களில், ஆசிரியர்களுக்கான பணிகள் ஒதுக்கீடு தற்போது முடிந்துள்ளது.
இதில், "முதுகலை ஆசிரியர்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கவில்லை" என்ற சர்ச்சை எழுந்ததால், தேர்வுப் பணிகளை புறக்கணிப்பதாக, தமிழ்நாடு மேல்நிலை முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகம் அறிவித்துள்ளது.
இதையொட்டி, இக்கழக கூட்டம் மதுரையில் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் சரவணமுருகன் தலைமை வகித்தார். மாநில அமைப்பு செயலாளர் பிரபாகரன், மாவட்ட செயலாளர் ரவி முன்னிலை வகித்தனர்.
இதில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து சரவண முருகன் கூறியதாவது:ஆசிரியர் தகுதி தேர்வையொட்டி, ஒரு தேர்வு மையத்தில் முதன்மை கண்காணிப்பாளர், துணை கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், கூடுதல் துறை அலுவலர்கள், அறைக் கண்காணிப்பாளர் பணிகள் ஆசிரியர்களுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது.
இது, பணிமூப்பு அடிப்படையில் ஒதுக்கப்படவில்லை. கூடுதல் துறை அலுவலர் பணிகளை பட்டதாரி ஆசிரியர்களுக்கும், அவர்களுக்குகீழ் பணியாற்றும் வகையில், அறைக் கண்காணிப்பாளர் பணிகளை, முதுகலை ஆசிரியர்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் தான் தேர்வுப் பணிகளை புறக்கணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது, என்றார்.
மாநில தலைவர் மணிவாசகம் கூறுகையில், "டி.ஆர்.பி., முடிவு படி தான் ஆசிரியர்களுக்கான தேர்வு பணிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அனைத்து மாவட்டங்களிலும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு கீழ் தான், முதுகலை ஆசிரியர்கள் பணியாற்றும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்து, அனைத்து மாவட்டங்களிலும் தேர்வு பணிகளை புறக்கணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது" என்றார்.
No comments:
Post a Comment