தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வின் இரண்டாம் தாளை 4 லட்சத்து 77 பேர் எழுதினர்.இந்தத் தேர்வுக்கு 4 லட்சத்து 11 ஆயிரத்து 635 பேர் விண்ணப்பித்தனர். இரண்டு தாள்களையும் சேர்த்து தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வினை இந்த ஆண்டு (2013) மொத்தம் ஆறு லட்சத்து 62 ஆயிரம் பேர் எழுதியுள்ளனர்.
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. முதல் தாள் சனிக்கிழமையும், இரண்டாம் தாள் ஞாயிற்றுக்கிழமையும் நடந்தன. முதல் தாளை 2 லட்சத்து 62 ஆயிரம் பேர் எழுதினர்.
மொழிப் பாடங்கள் கடினம்: ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இரண்டாம் தாளில் தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிப் பாடங்களில் கேள்விகள் கடினமாக இருந்ததாகவும், உளவியல் பாடத்தில் கேள்விகள் பொதுவாக இருந்ததாகவும் தேர்வர்கள் கருத்துத் தெரிவித்தனர். தமிழகம் முழுவதும் ஆயிரத்து 60 மையங்களில் நடந்த இரண்டாம் தாள் தேர்வை 4 லட்சத்து 77 பேர் எழுதினர்.
மூன்று வாரங்களில் வெளியீடு: ஆசிரியர் தகுதித் தேர்வின் இரண்டு தாள்களுக்கான விடைகளும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் (ற்ழ்க்ஷ.ற்ய்.ய்ண்ஸ்ரீ.ண்ய்) வெளியிடப்படும் என்று தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.
விடைகள் வெளியிடப்பட்ட பிறகு, தேர்வு முடிவுகள் இரண்டு மாதங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் உள்பட காலியாகவுள்ள மொத்தம் 14 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதித் தேர்வு நடத்தப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இரண்டாம் தாள் தேர்வின்போது கடும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஒவ்வொரு மையத்திலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டதோடு, போலீஸ் பாதுகாப்பும் அளிக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆட்சியர் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டு தேர்வுகள் கண்காணிக்கப்பட்டன. இந்தத் தேர்வினை எழுத பெண்கள் 73 சதவீதம் பேரும், ஆண்கள் 27 சதவீதம் பேரும் விண்ணப்பித்திருந்தனர்.
சென்னையில் எத்தனை பேர்? சென்னை மாவட்டத்தில் 26 ஆயிரத்து 96 பேர் தேர்வு எழுத விண்ணப்பத்திருந்தனர். அவர்களில் 24 ஆயிரத்து 782 பேர் தேர்வு எழுதினர். ஆயிரத்து 314 பேர் தேர்வு எழுதவில்லை.
தேர்வு மையங்களில் அதிகாரிகள் அவ்வப்போது நேரில் ஆய்வு செய்தனர்.
சில மையங்களில் தேர்வுக்கூட அலுவலர்களுக்கு போதிய பயிற்சிகள் வழங்கப்படாததால் அவர்கள் தேர்வர்களிடம் இருந்து 10 நிமிஷங்களுக்கு முன்பாகவே விடைத்தாள்களை பெற்றதாக புகார்கள் எழுந்தன.
சென்னை மாவட்டத்திலும் தேர்வு அமைதியாக நடந்து முடிந்தததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தெளிவு இல்லாத ஹால் டிக்கெட்: தேர்வுக்கூடங்களை தேடி அலைந்த தேர்வர்கள்
சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடந்த இரண்டாம் தாள் தேர்வின்போது தேர்வு மையங்களை தேர்வர்கள் தேடி அலையும் நிலை ஏற்பட்டது.
தேர்வுக்கூட நுழைவுச் சீட்டில் (ஹால் டிக்கெட்) சரியான விவரங்களைக் குறிப்பிடாததே இந்த குழப்பங்களுக்குக் காரணம் என்று புகார் கூறப்படுகிறது. தேர்வுக்கூட நுழைவுச் சீட்டில் தேர்வு மையத்தின் பிரதான சாலையின் பெயர் மற்றும் ஊர் பெயர் மட்டுமே இடம்பெற்றிருந்தது. இதனால், எந்தப் பள்ளி, அது எங்கு இருக்கிறது என்பதை கண்டுபிடிக்க முடியாமல் தேர்வர்கள் திணறினர்.
குறிப்பாக, சென்னை மாவட்டத்தில் மாநகராட்சி பள்ளிகள் அனைத்தும் சென்னை பள்ளிகள் என்றே அழைக்கப்படுகின்றன. தேர்வுக்கூட நுழைவுச் சீட்டில் தேர்வர்களுக்கு, சென்னை பள்ளி என்று மட்டுமே குறிப்பிடப்பட்டிருந்தது. அது ஆண்கள் பள்ளியா பெண்கள் பள்ளியா எந்தப் பகுதியில் இருக்கிறது என்கிற விவரங்கள் ஏதும் இல்லை. இதனால் தேர்வர்கள் தேர்வுக்கூட மையங்களைத் தேடி அலையும் நிலை ஏற்பட்டது.
டி.என்.பி.என்.சி., முன்மாதிரி: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளின் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளில் தேர்வு மையத்தின் விவரத்தை தெளிவாகக் குறிப்பிடுகிறார்கள். இதனால், தேர்வு மையத்தைக் கண்டுபிடிப்பது எளிதாக இருக்கிறது. அதே நடைமுறையை ஆசிரியர் தேர்வு வாரியமும் பின்பற்ற வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.
சென்னையில் மாநகராட்சிப் பள்ளிகளைக் குறிப்பிடும்போது மிகவும் கவனமாக அது எந்த இடத்தில் இருக்கிறது என்ற விவரத்தை முழுமையாக தேர்வுக்கூட நுழைவுச் சீட்டில் குறிப்பிட வேண்டும் என்றும் தேர்வர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
No comments:
Post a Comment