தமிழகம் முழுவதும் 4,340 அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், மத்திய அரசு நிதியுதவியுடன், தகவல் தொழில்நுட்ப கல்வி கற்பித்தல் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.தமிழக அரசு, பள்ளி மாணவர்களின் கல்வியறிவை மேம்படுத்தும் வகையில், பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. குறிப்பாக, அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, லேப்டாப் வழங்கப்படுகிறது. இது, மாணவர்களுக்கு பயனுள்ளதாக அமைந்துள்ளது.
அந்த வகையில், நடப்பு கல்வியாண்டு முதல், தமிழகம் முழுவதும் உள்ள 4,340 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், தகவல் தொழில்நுட்ப கல்வி கற்பித்தல் திட்டம், மத்திய அரசு நிதியுதவியுடன் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக, பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதன்படி, ஒரு பள்ளிக்கு, தலா 19 லட்சம் ரூபாய் என, மொத்தம் 86 கோடி ரூபாய் நிதியை, மத்திய அரசு, தமிழகத்துக்கு ஒதுக்கியுள்ளது. அதன் மூலம் கம்யூட்டர், பிரிண்டர் உள்ளிட்ட தளவாடப் பொருட்கள் வாங்க வேண்டும். மேலும், ஐந்தாண்டு ஒப்பந்த அடிப்படையில், கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் நியமனம் செய்து, மாணவர்களுக்கு, தகவல் தொழில்நுட்ப கல்வி குறித்து கற்பிக்கப்பட உள்ளது.
தமிழக ஆசிரியர் கூட்டணி, நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி வட்டார செயலாளர் ராமராசு கூறியதாவது: "தமிழகம் முழுவதும் 4,574 உயர்நிலைப்பள்ளி 5,030 மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. அதில் 50 சதவீத பள்ளிகள் என, மொத்தம் 4,340 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தேர்வு செய்து, நடப்பு கல்வியாண்டு முதல், தகவல் தொழில்நுட்ப கல்வி கற்பிக்கப்பட உள்ளது.
இதற்கு, மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத் துறை, 86 கோடி ரூபாயை, தமிழகத்துக்கு ஒதுக்கியுள்ளது. எதிர்காலத்தில், அனைத்து பள்ளிகளுக்கும் இத்திட்டம் விரிவாக்கம் செய்ய வாய்ப்புள்ளது. அனைத்து உதவி தொடக்க கல்வி அலுவலகங்களும், எதிர்காலத்தில் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அலுவலகம் போல், அனைத்து துவக்க, நடுநிலைப்பள்ளிகளுக்கும் கம்ப்யூட்டர் வழங்கினால், மாணவர்கள், அடிப்படையில் கம்ப்யூட்டர் அறிவை பெறுவர். மேல்நிலை வகுப்புகளுக்கு செல்லும் சமயத்தில், இது பயனாக அமையும்." இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment