பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மதிப்பெண்சான்றுகளில், திருத்தம் செய்யும் கோரிக்கை வராத வண்ணம் நடந்து கொள்ள, புதிய உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. தமிழகத்தில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ்களில், பெயர் திருத்தம், இன்ஷியல் திருத்தம்
மற்றும் ஜாதி திருத்தம் உள்ளிட்ட திருத்தம் கோரும் மனுக்கள், பள்ளிக்கல்வித் துறை இயக்குனர் அலுவலகத்தில், தினந்தோறும் ஏராளமாக குவிந்து வருகின்றன. இவற்றை தவிர்க்கும் வகையில், பள்ளியிலேயே நடவடிக்கை எடுக்க, தற்போது உத்தரவிடப்பட்டு உள்ளது. இதுகுறித்து, பள்ளிக்கல்வித் துறை இயக்குனர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: பள்ளி சேர்க்கையின்போது, மாணவர்களின் பெற்றோரால், சரியான விவரம் கொடுக்கப்பட்டு, பள்ளி பதிவில் தவறு செய்யப்பட்டிருந்தால் மட்டுமே, திருத்தம் மேற்கொள்ளப்படும். இதில் தவறு ஏற்படாத வகையில், 10ம் வகுப்பு பெயர் பட்டியல் அனுப்பப்படும் முன், அனைத்து விவரங்களையும், தலைமை ஆசிரியர் சரிபார்க்க வேண்டும். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு பெயர் பட்டியல் அனுப்பப்படுவதற்கு முன், பிறந்த தேதி, பெயர், இன்ஷியல், ஜாதி திருத்தம் கோரும் மனுவுக்கு, உரிய சான்றிதழ்களை சரிபார்த்து, தலைமை ஆசிரியரே, திருத்தம் மேற்கொள்ளலாம். ஆனால், எக்காரணம் கொண்டும், 10ம் வகுப்பு தேர்வு எழுதி மதிப்பெண் சான்று பெற்ற பின், திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது. நீதிமன்றங்களில், ஒரு தலைபட்ச தீர்ப்பின் அடிப்படையில், திருத்தம் கோரும் விண்ணப்பங்களை பரிந்துரைக்கக் கூடாது. நீதிமன்ற தீர்ப்பு பெற்றாலும், பள்ளிக்கல்வி இயக்குனரின் அனுமதி பெறாமல், மாற்றுச் சான்றிதழ் உள்ளிட்ட பள்ளி ஆவணங்களில் எவ்வித திருத்தமும், தலைமை ஆசிரியர் மேற்கொள்ளக் கூடாது.
பள்ளி நிர்வாகத்தின் கவனக்குறைவால், பிறந்த தேதி தவறாக பதிவு செய்யப்பட்டிருந்தால், அசல் மதிப்பெண் சான்று, முதல் வகுப்பு முதல் பயின்ற பதிவுத்தாள், பள்ளி சேர்க்கை விண்ணப்பம், எஸ்.எஸ்.எல்.சி., உறுதிமொழிச் சான்று, பிறப்பு சான்று உள்ளிட்டவற்றுடன், பள்ளி தலைமை ஆசிரியர், மாவட்டக் கல்வி அலுவலர் வழியாக மட்டுமே அனுப்பப்பட வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment