பாடப் புத்தகங்கள் அச்சிடும் பணிகளை அளிப்பதில், தமிழக அச்சகங்களுக்கு, முன்னுரிமை வழங்கப்படும்,'' என, தமிழ்நாடு பாடநூல் கழக நிர்வாக இயக்குனர் மகேஸ்வரன் தெரிவித்தார். பள்ளிகளில், ஒன்று முதல், ஒன்பதாம் வகுப்பு வரை, முப்பருவ கல்வி முறை, அமலில் உள்ளது. இதற்காக, பாடப் புத்தகங்கள், மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டு வழங்கப்படுகின்றன.
இரண்டாம் பருவத்திற்கான, 2.5 கோடி பாடப் புத்தகங்கள், செப்டம்பர் இறுதியில், பள்ளிகளுக்கு வழங்கப்பட உள்ளன. பாடப் புத்தகங்கள் அச்சிடும் பணி, 100க்கும் அதிகமான அச்சகங்களில் நடந்து வருகின்றன. பாடப் புத்தகங்கள் அச்சிடும் பணிகளை வழங்குவதில், தமிழக அச்சகங்கள் புறக்கணிக்கப்படுவதாகவும், ஆந்திர மாநிலம், ஐதராபாத்தில் உள்ள அச்சகங்களுக்கு, அதிகளவில், "ஆர்டர்'கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், தமிழக அச்சக அதிபர்கள், குற்றம் சாட்டுகின்றனர்.
இது குறித்து, பாடநூல் கழக நிர்வாக இயக்குனர் மகேஸ்வரனிடம் (கூறுதல் பொறுப்பு) கேட்டபோது, அவர் கூறியதாவது: இதற்கு முன், என்ன நடந்தது என, எனக்குத் தெரியாது. நான், சமீபத்தில் தான், கூடுதல் பொறுப்பை ஏற்றேன். தகுதியான நிறுவனங்களுக்கு, "ஆர்டர்' வழங்க வேண்டும் என்பதில், உறுதியாக உள்ளேன். பாடப் புத்தகங்கள் அச்சிடும் பணிகளை வழங்குவதில், முதலில், தமிழகத்தில் உள்ள அச்சகங்களுக்கு, முன்னுரிமை அளிக்கப்படும். அச்சகங்களின், அச்சடிப்பு திறனை ஆய்வு செய்து, உரிய வகையில், "ஆர்டர்'கள் வழங்கப்படும். இரண்டாவது பருவ புத்தகங்கள் அச்சிடும் பணிகளை, கூடுதலாக வழங்க உள்ளோம். அப்போது, தமிழக அச்சக நிறுவனங்களை, முதலில் பரிசீலனை செய்து, அச்சடிப்பு உத்தரவை வழங்குவோம். மாணவர்களுக்கு, உரிய நேரத்திற்கு முன்னதாக, பாடப் புத்தகங்களை வினியோகம் செய்துவிடுவோம். இவ்வாறு, மகேஸ்வரன் கூறினார்.
No comments:
Post a Comment